தாம்பரத்தில் ட்ரான்ஸ்பார்ம் வெடித்து தீ விபத்து.. 18 வீடுகளில் கடும் சேதம்..

 
தாம்பரத்தில் ட்ரான்ஸ்பார்ம் வெடித்து தீ விபத்து.. 18 வீடுகளில் கடும் சேதம்..

சென்னை தாம்பரம் அருகே கடப்பேரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ட்ரான்ஸ்பார்மர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பைக்குகள், கார் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன.

சென்னை தாம்பரம் கடப்பேரி பகுதியில் புதிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று உள்ளது.  மொத்தம் 18 வீடுகள் கொண்ட  இந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே மின்சார தேவைக்காக  டிரான்ஸ்பார்ம்  அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை அந்த ட்ரான்ஸ்பார்மரில் இருந்து திடீரென எண்ணெய்  கசிந்து வெடித்து சிதறியது. இதனைத்தொடர்ந்து ஏற்பட்ட தீ விபத்தில் குடியிருப்பு கட்டிடத்தின்  கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த 3 இருசக்கர  வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமானது.   ஒரு கார்  சேதமடைந்தது.   அத்துடன் வீட்டில் பயன்படுத்தப்பட்ட  ஏசி உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் டிரான்ஸ்பார்ம் திடீரென வெடித்து சிதறியதால் தீ பிடித்து சேதம் அடைந்தது.

fire

இதனை அடுத்து அப்பகுதி மக்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இது தொடர்பாக தாம்பரம் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு,  நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை முழுவதுமாக அணைத்தனர்.  ட்ரான்ஸ்பார்ம், அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திலேயே இருந்ததால் அருகிலிருந்த வீடுகளும், கட்டிடமும்  விபத்தில் பலத்த சேதமாகியிருக்கிறது.  இந்த விபத்து குறித்து தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.  

குடியிருப்பு வளாகத்திற்குள்ளேயே அமைக்கப்பட்டுள்ள ட்ரான்ஸ்பார்ம் மிகவும் ஆபத்தானது என்றும், அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்றும் குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மின்வாரிய ஊழியர்கள் டிரான்ஸ்பார்ம் வெடித்த  தகவல் இருந்து அப்பகுதியில் மின்சாரத்தை துண்டித்து, சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இந்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.