இட்லி கடை செட்டில் பயங்கர தீ விபத்து.! அதிர்ஷ்டவசமாக தப்பிய நடிகர்கள்..!

 
1 1

NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்) என்ற படத்தை இயக்கி இருந்தார் நடிகர் தனுஷ். இந்த நிலையில் அடுத்ததாக Dawn Pictures என்கின்ற தயாரிப்பு நிறுவனம் தயாரிப்பில் நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கிறார்.இந்த திரைப்படத்திற்கு இட்லிகடை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்தில் நித்யாமேனன் ஜோடியாக நடித்து வருகிறார். சத்யராஜ், ராஜ்கிரண், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.  இந்த படத்தின் படப்பிடிப்பு தென் மாவட்டங்களில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது.

மேலும் இந்த படத்திற்காக தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள அனுப்பப்பட்டி கிராமத்தில் சூட்டிங் நடை பெற்று வருகிறது. அனுப்பப்பட்டி கிராமத்தில் ஒரு தெரு போன்ற செட்டில் கடைகள் வீடுகள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் தான் தனுஷ் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டது.

கடந்த 20 நாட்களாக நடைபெற்று வந்த செட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்பாக வேறு பகுதிக்கு படப்பிடிப்பு மாற்றப்பட்டு நடைபெற்று வந்தது. மீண்டும் அனுப்பப்பட்டி கிராமத்தில் படப்பிடிப்பை நடத்த திரைப்பட குழு திட்டமிட்டிருந்தது. இதன் காரணமாக செட் பிரிக்கப்படாமல் அப்படியே இருந்தது. 

இந்த நிலையில் அனுப்பப்பட்டி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த செட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  இட்லி கடை படத்திற்காக மரம் மற்றும் பிளைவுட்டால் அமைக்கப்பட்ட அந்த செட்டில் பற்றிய தீ மளமளவென பரவியது.  காற்றின் வேகமும் அதிகமாக இருந்ததால் தீயானது வேகமாக பரவி கொளுந்து விட்டு எரிய தொடங்கியது.  

இந்த விபத்து குறித்து அப்பகுதி மக்கள் ஆண்டிப்பட்டி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்டிப்பட்டி தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.  

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தீ விபத்து நடைபெற்ற பகுதியில் படப்பிடிப்பு நடைபெறாத காரணத்தால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.