விருதுநகர் பட்டாசு ஆலையில் விபத்து- ஒருவர் உயிரிழப்பு

 
பட்டாசு ஆலை

விருதுநகர் அருகே சட்டவிரோதமாக, அனுமதியின்றி பட்டாசு தயாரித்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விருதுநகர்  அருகே  வெள்ளுர் கிராமத்தில் மகேஷ் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் உள்ளது. இங்கு  தற்காலிக தகர செட் அமைத்து   சட்டவிரோதமாக  பட்டாசுகளை தயாரித்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு அங்கு வெடி விபத்து ஏற்பட்டு பயங்கர சத்தம் கேட்டது. இதனால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு  வந்த தீயணைப்பு வெகு நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த வெடி விபத்தில் வெள்ளூரை சேர்ந்த கண்ணன்(48) என்பவர்  உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடலை மீட்டு ஆமத்தூர் போலீசார் விசாரணை நடத்தினர். கண்ணன் பக்கத்து தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் அந்த நேரத்தில் ஏன் அங்கு வந்தார்? என்பது தெரியவில்லை. ஒருவேளை பட்டாசு தீப்பற்றியதை பார்த்து அணைப்பதற்காக வந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் தோட்ட உரிமையாளர் மகேஷ் என்பவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.