புதுச்சேரியில் கடல் அரிப்பால் பிரதான சாலை உடைந்து மீனவர்கள் தவிப்பு!

 
ச் ச்

டிட்வா புயலால் 3வது நாளாக புதுச்சேரியில் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. 15 மீனவ கிராமங்களிலும் படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்தில் உள்ள நிலையில் சின்ன காலாப்பட்டில் கடல் அரிப்பு சாலையில் ஏற்பட்டுள்ளது. பிரதான சாலை கடல்நீரால் மூழ்கி கிராமம் துண்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் டிட்வா புயலால் 3 வது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. இரண்டு நாளாக தொடர் மழை பெய்ததது. நேற்று காலை முதல் இன்று காலை வரை 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 7.53 செ. மீ மழை பெய்தது. டிட்வா புயலால் ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தால் புதுச்சேரி கடற்கரைச்சாலை மூடப்பட்டது. இது தெரியாமல் ஆர்வமாக பொதுமக்களும், சுற்றுலாபயணிகளும் கடற்கரைக்கு வந்த நிலையில்  போலீஸார் அறிவுரைக்கூறி அனுப்பி வைத்தனர்.


டிட்வா புயலின் தாக்கம் மீனவ கிராமங்களில் அதிகம் இருந்தது. குறிப்பாக கனகசெட்டிக்குளம் தொடங்கி முள்ளோரை வரை 15 கிராமங்களிலும்  படகு, வலைகளை பாதுகாக்க மீனவர்கள் சிரமத்துக்கு உள்ளானார்கள். குறிப்பாக சோலைநகர் பகுதியில் மழைநீர் புகுந்தததால் படகுகளை பாதுகாப்பான மேடான பகுதியில் கொண்டு சென்றனர். தொடர் மழை காரணமாக சின்ன காலாப்பட்டு மீனவர் பகுதியில் இருந்து ஊருக்கு செல்லும் பிரதான சாலை கடல் நீரால் மூழ்கி கிராமம் துண்டிக்கப்பட்டது. கடல் அரிப்பு பிரதான சாலை உடைந்து துண்டிக்கப்பட்டு கிராமமக்கள் 300 பேர் தவிக்கின்றனர். குறிப்பாக படகுகளை நிறுத்தி வைக்கப்பட்ட பகுதிக்கு டிராக்டர், ஜேசிபி இயந்திரம் செல்ல முடியாத நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இதில் உதவ வேண்டும் என கோரியுள்ளனர்.