காரைக்காலில் மீனவர்கள் ரயில் நிலையத்தில் போராட்டம்

 
ச் ச்

இலங்கை அரசின் துப்பாக்கிச்சூடு சம்பவம் மற்றும் கைது நடவடிக்கையை கண்டுகொள்ளாத புதுச்சேரி மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து காரைக்கால் மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல் மேடு மனோக கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் என்ற மீனவர் மீது கடந்த மாதம் துப்பாக்கி சூடு நடத்தி இலங்கை கடற்படை 13 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்தது. கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு 9 மாத சிறை தண்டனை, 40 லட்ச ரூபாய் அபராதம் விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இலங்கை கடற்படையை கண்டித்தும் கண்டுகொள்ளாத புதுச்சேரி மற்றும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்கள் ஒரு வார காலமாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

கடந்த 12ஆம் தேதி போராட்டத்தை அறிவித்த மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் கருப்புக்கொடி போராட்டம் இருசக்கர வாகன பேரணி என பல்வேறு கட்டத்தில் அரசுக்கு தங்களுடைய எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் மத்திய மாநில அரசை கண்டிக்கும் வகையில் காரைக்கால் ரயில் நிலையத்தில் தஞ்சாவூர் செல்லும் பயணிகள் ரயிலை மறித்து மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தண்டவாளத்தில் படுத்தும் அமர்ந்தும் மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி ஒன்றிய மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுக்கும் போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதை தொடர்ந்து பெண்கள் உள்ளிட்ட மீனவர்களை குண்டுகட்டாக தூக்கி அப்புறப்படுத்தி ரயிலை போலீசார் புறப்பட செய்தனர். அப்போது மீனவர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுது புதுச்சேரி மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராகவும் கைது நடவடிக்கையை கையில் எடுத்த காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். 

இலங்கை அரசிடம் தங்களுடைய படகு சிக்கி இருப்பதால் கடன் பட்டு 21 நாட்களாக தவிர்த்து வருவதாகவும் உடனடியாக தங்களுடைய படகுகளை விடுவிக்க ஒன்றிய மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்ணீர் மல்க படகின் உரிமையாளர் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஒரு பிரம்மச்சாரி, அதே போல இந்திய பிரதமர் மோடி ஒரு பிரம்மச்சாரி இருவருக்கும் தாய்மை உணர்வு என்றால் என்னவென்று தெரியாது ஆகையால் குண்டடிப்பட்டு சிக்கித் தவிக்கும் எங்களுடைய பிள்ளைகளை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர். 

காரைக்கால் மாவட்டத்தில் கிழிஞ்சல் மேடு கோட்டுச்சேரி மேடு கீழ காசாக்குடி மேடு உள்ளிட்ட 11 மீனோ கிராமங்களை சேர்ந்தவர்கள் இதுவரை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் மீனவர்கள் மட்டுமின்றி மீன்பிடி தொழிற்சாலை ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் வாழ்வாதாரம் இழந்து வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனிடையே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களிடம் புதுச்சேரி மீன்வளத்துறை அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் நாளைய தினம் காரைக்கால் மாவட்டம் முழுவதும் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக மீனவ கிராம நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.