சேலம் விமான நிலையத்தில் செப்டம்பர் முதல் மீண்டும் விமான சேவை..

 
சேலம் விமான நிலையத்தில் செப்டம்பர் முதல் மீண்டும் விமான சேவை..

சேலம் விமான நிலையத்தில் வருகிற செப்டம்பர் மாதம் முதல்  மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

1993ம் ஆண்டு தொடங்கப்பட்ட சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில், விமானங்களை இயக்க ஆரம்பத்தில் எந்த விமான நிறுவனங்களும் முன்வரவில்லை. பின்னர் கடந்த 2018ம் ஆண்டு முதல் உதான் திட்டத்தின் கீழ் சென்னை - சேலம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. ட்ரூஜெட் நிறுவனம் மட்டும் இந்த சேவையை வழங்கி வந்தது. அதுவும் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் நிறுத்தப்பட்டது.  அதன்பிறகு தற்போது வரை சேலம் விமான நிலையத்தில் விமான் போக்குவரத்து சேவை தொடங்கப்படவில்லை.

இண்டிகோ விமான நிறுவனத்தின் லாப கனவை சிதைத்த லாக்டவுன்… ரூ.871 கோடி நஷ்டம்..

ஆனால் விமான சேவையை மீண்டும் தொடர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்த நிலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் சேலத்தில் இருந்து மீண்டும் விமான சேவை தொடங்கப்பட உள்ளது. அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனமும் மற்றும் இண்டிகோ விமான நிறுவனமும் விமானங்களை இயக்க முன்வந்துள்ளன. அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் முதல் மீண்டும் விமானங்கள் இயக்கப்பட உள்ளன.  இதில் அலையன்ஸ் ஏவியேஷன் நிறுவனம் சார்பில் வாரத்தின் 7 நாட்களும்  பெங்களூரு-சேலம், கொச்சின்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய விமான சேவைகளை  வழங்க ஒப்புதல் அளித்திருக்கிறது.  அதேபோல் இண்டிகோ நிறுவனம் சார்பில் வாரத்தின் 4 நாட்களுக்கு  பெங்களூரு-சேலம், ஐதராபாத்-சேலம், சேலம்-பெங்களூரு ஆகிய சேவைகளை   வழங்க ஒப்புதல் தெரிவித்திருக்கிறது.

ஆனால்  சேலம்-சென்னை இடையேயான விமான சேவைக்கு மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை.  இதனையடுத்து விமான நிலைய விரிவாக்க பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.  6 ஆயிரம் அடி நீளத்துக்கு உள்ள ரன்வே பாதையை, 8 ஆயிரம் அடி நீளத்துக்கும்,  தற்போது  2 விமானங்கள் நிறுத்தி வைக்க முடிகின்ற சூழலில்  ஒரே நேரத்தில் 4 விமானங்கள் நிறுத்தி வைக்க விரிவாக்க பணிகளும்  தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் இன்னும் ஒரு மாதத்தில் நிறைவடைந்துவிடும் என கூறப்படுகிறது.