புழல் ஏரி நீர் திறப்பு - முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

 
chembarambakkam lake - செம்பரம்பாக்கம் ஏரி chembarambakkam lake - செம்பரம்பாக்கம் ஏரி

புழல் ஏரி முழு கொள்ளளவை எட்ட உள்ள நிலையில் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் புழல் ஏரி முக்கிய பங்கு வகிக்கிறது. 3300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் வடகிழக்கு பருவமழை காரணமாக வேகமாக நிரம்பி வருகிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி புழல் ஏரியில் 2956 மில்லியன் கனஅடி நீர் நிரம்பியுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியில் நீர்மட்டம் 19.72 அடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 2281 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. நேற்று பரவலாக பெய்த கனமழை காரணமாக புழல் ஏரிக்கு மேலும் நீர்வரத்து அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது புழல் ஏரி 89.57% நீர் இருப்பை நெருங்கிய நிலையில் ஏரியின் பாதுகாப்பு கருதி ஏரியில் இருந்து முதற்கட்டமாக 500க னஅடி உபரிநீர் திறக்கப்பட்டது. 

நீர்வளத்துறை அதிகாரிகள் பூஜைகளை செய்து ஏரியில் நீர் வெளியேற்றப்படும் இரண்டு ஷட்டர்களின் வழியே தண்ணிரை திறந்துள்ளனர். புழல் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் சுமார் 13.5கி.மீ. கால்வாய் வழியே எண்ணூர் கடலில் சென்று சேரவுள்ளது. நாரவாரிகுப்பம், வடகரை, கிராண்டலைன், சாமியார்மடம், தண்டல்கழனி, பாபாநகர், வடபெரும்பாக்கம், வடகரை, மணலி, கொசப்பூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களின் வழியே உபரிநீர் செல்ல உள்ளதால் உபரிநீர் கால்வாய் ஓரங்களில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார். கனமழை காரணமாக நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் உபரிநீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.