மீண்டும் சென்னையில் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்..

 
மீண்டும் சென்னையில் உற்பத்தியை தொடங்கும் ஃபோர்டு நிறுவனம்.. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னெடுப்பையடுத்து,  ஏற்றுமதிக்காக தமிழ்நாட்டில் மீண்டும் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக  ஃபோர்டு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. 

சென்னை அடுத்த மறைமலை நகர் அருகே   ஃபோர்டு கார் உற்பத்தி தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. பின்னர்  விற்பனையில் சரிவு, செமிகண்டக்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக 2021ஆம் ஆண்டு ஃபோர்டு நிறுவனம் அறிவித்தது. குஜராத்தில் இருந்த ஆலையை டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்த நிலையில்,  இதனை தொடர்ந்து சென்னை அடுத்த மறைமலை நகர் அருகே உள்ள ஃபோர்டு ஆலையில்  2022ஆம் ஆண்டு  உற்பத்தி நிறுத்தப்பட்டது. 12,000 ஊழியர்களுடன் செயல்பட்டு வந்த ஆலை மூடப்பட்டது பெரும் பேசுபொருளானது.  

Image

இந்நிலையில் தமிழகத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 2 தினங்களுக்கு முன்னர்  சிகாகோவில் ஃபோர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, சென்னை தொழிற்சாலையில் மீண்டும் உற்பத்தியை தொடங்க வேண்டும் என ஃபோர்டு நிறுவன அதிகாரிகளிடம் முதலமைச்சர் வலியுறுத்தினார். முதலமைச்சரின் வலியுறுத்தலை ஏற்று சென்னை தொழிற்சாலையில் ஃபோர்டு நிறுவனம் உற்பத்தியை தொடங்குகிறது. 

ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதுடன் ஏற்கனவே 12,000 ஊழியர்களுடன் கூடுதலாக 3,000 ஊழியர்களை பணியில் அமர்த்தவும் முடிவு செய்துள்ளது.  மீண்டும் சென்னை தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்குவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஃபோர்டு நிறுவனம் வெளியிட்டுள்ளது.   இந்நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதம் மூலம் ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்பது, முதலமைச்சரின் அமெரிக்க பயணத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.