ஓ.பன்னீர்செல்வத்திடம் லஞ்ச ஒழிப்பு துறை விசாரணை நடத்த வேண்டும் - ஜெயக்குமார்

 
jayakumar

ஓ.பன்னீர்செல்வத்திற்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் உள்ளதாகவும், அவரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: ஓ.பி.எஸ். தரப்பினர் மாநாடு நடத்திக் கொள்ளட்டும். யாரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும். அமெரிக்க அதிபரை கூப்பிடட்டும். இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை கூப்பிடட்டும். உலகின் எந்த நாட்டு அதிபரை வேண்டும் என்றாலும் கூப்பிடட்டும். நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? எங்களை கடிக்காமல் இருந்தால் சரி. அவருக்கு உலகம் முழுவதும் சொத்துக்கள் இருக்கு. அதைத்தான் நாங்கள் சொல்கிறோம். இனி கருப்பு பணம் வெளியே வரும். ஒரு 200 கோடி ரூபாய் செலவு செய்தால் யார் வேண்டுமானாலும் 2 லட்சம் பேரை கூட்டி விடலாம். ஒரு ஆளுக்கு 300 ரூபாய் கொடுத்தால் ஒரு லட்சம் பேரை கூட்டிவிட்டோம் என்று சொல்லலாம். ஓ.பன்னீர்செல்வத்திடம் இருக்கும் கருப்பு பணம் எல்லாம் இப்போது வெளிவருகிறது.  

200 கோடி ரூபாயை அவர் வீட்டில் இருந்து கொண்டு வந்து ஒரு மாயையை உருவாக்க வேண்டும் என்று நினைக்கிற விஷயம் தான் இது. இந்த மாநாட்டால் ஒரு தாக்கமும் ஏற்படாது. அவருடைய கருப்பு பணம்தான் மக்களிடம் சேரப்போகிறது. ஓ.பன்னீர்செல்வத்திடம் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை பண்ணட்டும். நானே சொல்கிறேன் உடனே பண்ண வேண்டும் என்று. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியதை கிடப்பில் போட்டுள்ளது. அதை தூசு தட்டட்டும். அவருக்கு உலகம் முழுவதும் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. தமிழ்நாட்டில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது.. தேனி மாவட்டத்தில் எவ்வளவு சொத்துக்கள் இருக்கிறது. என்பதையெல்லாம் தி.மு.க. தோண்டி எடுத்து வெளியே கொண்டு வரட்டும். இவ்வாறு கூறினார்.