"ஆட்கொல்லி டி-23 புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக் கொல்லப்படாது"

 
tiger

4 பேரைக் கொன்ற டி23 புலி சுட்டுக் கொல்லப்படாது என  தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை வெளிவட்டத்தில் மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் tடி-23 என்று அழைக்கப்படும் புலி ஒன்று சுற்றித் திரிகிறது. கடந்த இரண்டு வாரத்தில் 2 பேரை கொன்று அந்த புலி இதுவரை 4 பேரைக் கொன்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஏராளமான ஆடுகள், மாடுகள், நாய்கள் என வளர்ப்பு பிராணிகளையும் அந்த புலி கொன்றதால் அதை ஆட்கொல்லி புலி என அப்பகுதியினர் அழைக்கிறார்கள். மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த புலியை சுட்டு பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

tiger

இதனிடையே, அந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்த 5 இடங்களில் குண்டு வைத்த முயற்சி பலனளிக்கவில்லை. தொடர்ந்து ஒரு வாரத்திற்கும் மேலாக அந்த புலி வனத்துறையினரிடம் சிக்காமல் காட்டுப்பகுதிக்குள் சுற்றித்திரிந்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் அந்த புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டது. அதற்காக 70 பேர் கொண்ட குழு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளது. மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கும் அந்த புலியை சுட்டுப்பிடிக்க உத்தரவிடப்பட்டதற்கு கமல்ஹாசன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அந்த புலியை பிடிக்க வேண்டுமென கூறியிருந்தனர்.

இந்த நிலையில், டி 23 புலி எக்காரணம் கொண்டும் சுட்டுக்கொல்லப்படாது என தமிழக முதன்மை தலைமை வன உயிரின பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தெரிவித்துள்ளார். புலியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்ட பின் பேசிய அவர், புலியை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகள் மட்டுமே தற்போது வரை நடைபெறுவதாக கூறியுள்ளார்.