கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம்..

 
கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காட்டுத்தீ.. ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி தீவிரம்..

கோவையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பற்றி எரியும் காட்டுத்தீயை , ஹெலிகாப்டர் உதவியுடன் அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

கோவை மாவட்டம் ஆலாந்துறை ஊராட்சிக்கு உள்பட்ட நாதேகவுண்டன்புதூர், மச்சினாம்பதி, பெருமாள்பதி ஆகிய பகுதிகளை ஒட்டிய  மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், கடந்த 11-ந் தேதி திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும்   வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  ஆனால் தீ வனப்பகுதி முழுக்க வேகமாக பரவி விட்டதால்  தீயை அணைப்பது  வனத்துறையினருக்கு சவாலாகியுள்ளது.  இதையடுத்து உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை புலிகள் காப்பகம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட வனத்துறையினர் கோவைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

கொடைக்கானலில் 500 ஏக்கரில் பற்றி எரியும் காட்டுத்தீ.. மூலிகை செடிகள்,  மரங்கள், விலங்குகள் அழியும் அபாயம்..

தீ எரிந்து வருவதால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு  கண் மற்றும் கை, கால் எரிச்சல் ஏற்பட்டது. ஆனாலும் முதலுதவி சிகிச்சை எடுத்து கொண்டு, தொடர்ந்து தீயை அணைக்க போராடி வருகின்றனர்.   தீ வேகமாக வனத்தில் பரவி வருவதால், ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை கட்டுப்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  இதுதொடர்பான வனத்துறையினரின் கோரிக்கையை ஏற்ற விமானப்படை ஹெலிகாப்டரை பயன்படுத்த அனுமதி வழங்கியது.
 இதையடுத்து இன்று காலை சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து  ஹெலிகாப்டர் கொண்டு வரப்பட்டு,  மலைக்கு பின்புறம் உள்ள மலம்புழா அணையில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்றது.  

  மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ..

காலை 8.30 மணி வரை இதுபோன்று 3 முறை ஹெலிகாப்டரில் தண்ணீர் தெளிக்கப்பட்டது. வெயில் அதிகமாக இருப்பதால்  தீ எரிவது சரியாக தெரியவில்லை.  ஆகையால் மாலையில்  மீண்டும்  ஹெலிகாப்டர் மூலம் தீயை அணைக்கும் பணி தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.   இதுவரை 90 சதவீதம் தீ அணைக்கப்பட்டு விட்டதாகவும்,  தற்போது இருட்டுப்பள்ளம், மதுக்கரை வனச்சரகம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் காட்டுத்தீயின் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.  இதுவரை சுமார் 15 ஹெக்டேர் செடிகள் எரிந்துள்ளதாகவும்,  தற்போது ஹெலிகாப்டர் உதவியுடன் தீயை அணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது என்றும் கூறினர்.