வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையை அரசு ஒரு புறம் எடுத்தாலும் மக்களிடம் சுய ஒழுக்கம் அவசியம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு முடிவுற்றதிட்டங்களையும் தொடங்கி வைத்தார். அந்தவகையில் கிண்டியில் அமைய உள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்திற்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து 14 கடலோர மாவட்டங்களில் fish net initiative திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் கிரேடர் பிளமிங்கோ பறவை சரணாலயம் தொடங்கி வைத்தும், வனத்துறையில் புதிதாக பணியில் சேர்வதற்கான பணி ஆணைகளை வழங்கி நீர்நிலை பாதுகாவலர் விருது, தொழில் துறைகளுக்கு தன்னார்வ பசுமை மதிப்பீட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை முதலமைச்சர் வழங்கினார்.

சுற்றுச்சூழல் சிறப்பான பங்களிப்பு அளித்த மாவட்ட ஆட்சியர்களுக்கான விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேடையில் வழங்கினார். திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப் மற்றும் கிருஷ்ணகிரி ஆட்சியர் தினேஷ்குமார் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், குழந்தைகளின் எதிர்காலம் நாம் செய்யும் செயல்களில் தான் இருக்கிறது. தமிழகத்தில் காடுகளை பாதுகாக்கும் மனித வளம் அவசியம் என்றும், அதனால் இந்த நேரத்தில் காலி பணியிடங்களை நிரப்பிய வன அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிகாரிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாக கூறினார். வனக்காவலர்கள் தான் காடுகளின் முதுகெலும்பு; நமது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் சூப்பர் ஹூரோக்கள் நீங்கள் தான் என்றும் எனக் கூறினார்.
எந்த மாநிலத்திலும் இல்லாத சிறப்பான பணியை கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் செய்து இருப்பதாகவும், தமிழ்நாடு பசுமை இயக்கம் மூலமாக 10 கோடிக்கும் அதிகமான மரங்கள் நட்டு இருப்பதாகவும், 21 ஈர நிலத்தை உருவாக்கி இருப்பதாகவும், காலநிலை மாற்றம் திட்டத்தை தமிழகத்தில் தொடர்ந்து செயல்படுத்தி வருவதாக முதல்வர் குறிப்பிட்டார். மேலும் ஏழு வன உயிரின காப்பகங்களை பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக பராமரிப்பு செய்து வருவதாக தெரிவித்தார்.

2,400 ஏக்கர் பரப்பளவில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கி இருப்பதும், சதுப்பு நிலத்தை மீட்பு செய்து இருப்பது முக்கியமான மைல் கல் என தெரிவித்தார். தொடர்ந்து தனுஷ்கோடியில் சரனாயலம் கொண்டு வந்து இருப்பதும் முதன்மையானது என தெரிவித்தார். அரசு நினைப்பது மட்டுமில்லாமல், ஊர் கூடி தேர் இழுக்க வேண்டியது அவசியம் என்றும், எனவே சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்றார்.
ஒரு ட்ரில்லியன் டாலர் வளர்ச்சி என்பது மட்டுமில்லாமல், பசுமை பொருளாதாரமாக இருக்க வேண்டும். என முக்கியத்துவம் அளிப்பதால் தான் மீண்டும் மஞ்சப்பை மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என தமிழ்நாடு அரசு முன்னெடுத்து இருப்பதாக கூறினார்.
ஜப்பான் போன்ற நாடுகளை போல மாற வேண்டும் என சினிமாவில் வருவது போல் மக்கள் நினைப்பார்கள். ஆனால் மக்களுக்கு இருக்க வேண்டிய சுய ஒழுக்கம் அவசியம் என்றும் அது மாற்றத்தை ஏற்படுத்தும் என முதல்வர் குறிப்பிட்டார். அதனால் தான் குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்ற திட்டம் கூட நடைமுறைப்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டார்.


