இடைத்தேர்தலில் அதிமுகவின் வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது - செங்கோட்டையன் பேட்டி

 
Sengottaiyan

திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: எடப்பாடி பழனிசாமி தலைமையில் முதன்முறையாக இடைத்தேர்தலை சந்திக்கின்றோம். கொங்கு மண்டலம் என்பது அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. யாராலும் தகர்க்க முடியாது. அவரது தலைமையில் இன்று பணியை ஆற்றுகின்றோம். அனைத்து பகுதிகளிலும் தேர்தல் களம் கண்டவர்கள் வந்துள்ளனர். பல தேர்தலை சந்தித்தவர்கள் பணியாற்றுகின்றார்கள். தேர்தல் களத்தில் அமைதியோடு மக்களை சந்தித்து வாக்குகளை சேகரிக்கும் பணியை சிறப்பாக செய்து வருகின்றோம். இந்த தேர்தல் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். திண்டுக்கல் இடைத்தேர்தல் போல் வரலாற்று சிறப்புமிக்கதாக ஈரோடு இடைத்தேர்தல் இருக்கும். திருப்பு முனையை உருவாக்கும் தேர்தலாக இருக்கும். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்டது.  ஆகவே களத்தில் பணிகளை சிறப்போடு, அமைதியோடு செய்து வருகின்றோம். சரியான முறையில் கழகத்தின் சார்பாக எடப்பாடி தலைமையில் சரியான முறையில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறது. தேர்தல் களத்தில் அந்த பணிகளை சிறப்பாக செய்து வருகின்றோம். 

இரட்டை இலை சின்னம் வழக்கை பொறுத்தவரை நீதித்துறையில் என்னென்ன தேவையோ அதை பூர்த்தி செய்து செயல்பட்டு வருகிறோம். அச்சமின்றி தேர்தல் பணி செய்கிறோம். தெளிவாக 98.5 சதவீத பேர் ஒரு மனதாக பொதுச்செயலாளரை தேர்வு செய்து பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் தலைமை கழக நிர்வாகிகள் செயலாற்றுகிறோம். முழு மனதோடு வெற்றி கிடைக்கும் என்று நம்பிக்கையோடு உள்ளோம்.  4 அணிகளாக பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் சிதறாது. தேர்தல் களத்தில் மனு தாக்கல் தொடங்கி முடிய கால அவகாசம் உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அதையும் ஆய்வு செய்து வருகின்றோம். முழுமையாக ஆய்வு செய்த பிறகு வேட்பாளர் அறிவிக்கப்படுவார். குருச்சேத்திர யுத்தத்தை போல் வியூகம் வகுத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். இவ்வாறு கூறினார்.