“அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்கு இபிஎஸ் தான் காரணம்”- பரபரப்பு குற்றச்சாட்டுடன் ராஜினாமா செய்த முன்னாள் எம்பி
அதிமுக முன்னாள் எம்.பி. இளவரசன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி அடிப்படை உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

அதிமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் நிர்வாகிகள் வெளியேற்றம் நாள்தோறும் நடந்து வருகிறது. இந்த நிலையில் இன்று திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளருமான இளவரசன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் விலகுவதாக அறிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், எடப்பாடி பழனிசாமியின் தலைமையின் கீழ் அதிமுக தொடர் தோல்விகளைச் சந்தித்து வருவதாகவும், ஆனால் அந்தத் தோல்விகளுக்குத் தான் பொறுப்பேற்பதாக இ.பி.எஸ் ஒருமுறை கூடக் கூறியதில்லை. பிரிந்து கிடக்கும் அதிமுகவின் பல்வேறு அணிகளை ஒருங்கிணைக்க எடப்பாடி பழனிசாமி முற்றிலும் தவறிவிட்டார். அவரது பிடிவாதப் போக்கே அதிமுகவின் தற்போதைய அவல நிலைக்குக் காரணம். திமுகவின் ஆதரவைப் பெற்று முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்ததார். அதிமுகவை அழிக்க நினைத்தவர்களோடு கூட்டணி வைக்க முயன்றுள்ளார். கட்சியில் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் புறக்கணிக்கப்பட்டு, பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே தற்பொழுது பதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
தோல்விகள் குறித்து ஒவ்வொரு முறையும் இ.பி.எஸ்ஸிடம் நேரில் சுட்டிக்காட்டியும், அவர் யார் பேச்சையும் கேட்பதில்லை முக்கிய நிர்வாகிகள் கட்சியை விட்டு வெளியேறுவதை அவர் இன்னும் உணரவில்லை. எம்.ஜி.ஆருடன் யாரையும் ஒப்பிட முடியாது என்றாலும், எம்.ஜி.ஆரின் சில கொள்கைகளை விஜய் தற்பொழுது பின்பற்றி வருகிறார் என்றும், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் துணிச்சல் விஜயிடம் இருக்கிறது. தற்போது அதிமுகவில் விலகுகிறேன் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. ஒருவகையில் அதிமுகவில் தற்போதைய பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மாற்றப்பட்டால் தனது அரசியல் நிலைப்பாடு மாறும். ஆனால் கடவுளே வந்தாலும் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் பதவியில் இருந்து மாற்ற முடியாது என தெரிவித்தார்.

