முன்னாள் ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு நிபந்தனையுடன் முன்ஜாமின்..

 
பொன் மாணிக்கவேலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு

சிலை கடத்தல் வழக்கில் முன்னாள்  ஐ.ஜி.பொன்மாணிக்கவேலுக்கு  நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 

தமிழக சிலை கடத்தல் பிரிவு ஓய்வு பெற்ற முன்னாள் ஐஜி-யாக இருந்தவர் பொன்.மாணிக்கவேல். இவர் மீது சிலை கடத்தல் தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்த நிலையில், பொன்மாணிக்கவேல் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் முன்ஜாமின் கோரி மனுதாக்கல் செய்திருதார்.  அவர் தனது மனுவில், “சிலை கடத்தல் வழக்கை டிஐஜி தரத்திற்கு குறையாத அலுவலரைக் கொண்டு, விசாரணை மேற்கொண்டு, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால் சிபிஐயின் காவல் கண்காணிப்பாளர் வழக்கு பதிவு செய்துள்ளார்.  

 உயர்நீதிமன்றக் கிளை

அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லை. அவ்வாறு இருக்கையில் அவர் வழக்கு பதிவு செய்தது ஏற்கத்தக்கது அல்ல. சட்டவிரோதமானது. தவறு செய்ததாக அறிக்கை அளிக்கப்பட்டால் விசாரணை நீதிமன்றம் முடிவு செய்யும். சிபிஐ எனது வீட்டில் நுழைந்து பொருட்களை கைப்பற்றியது சட்டவிரோதமானது. இது என் மீதான நன்மதிப்பை குலைக்கும் விதமாக உள்ளது. ஆகவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். 

இந்த வழக்கு ஏற்கனவே நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது,  மனுதாரர் மீதான வழக்கு, ஜாமீனில் விடுவிக்கக் கூடிய பிரிவுகளின் அடிப்படையில் பதிவாகியுள்ளதா? என்பது தொடர்பான ஆவணங்களை  தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேலுக்கு முன்ஜாமின் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. 4 வாரங்களுக்கு சென்னை சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டுள்ளது.