ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் - ஜெயக்குமார் கேள்வி

 
jayakumar

அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். 

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி, நீதிமன்ற காவலில் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில், செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து உடனடியாக நீக்குவதாக நேற்று இரவு ஆளுநர் அலுவலகம் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி, விசிக உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட  பல்வேறு தலைவர்கள்  ஆளுநரின் நடவடிக்கையை கடுமையாக சாடி வருகின்றனர். இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் பதவி நீக்க உத்தரவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. நிறுத்தி வைத்துள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது.

senthil balaji

இந்நிலையில், செந்தில் பாலாஜியை நீக்கும் விவகாரத்தில் கவர்னர் சமயோஜித புத்தியோடு செயல்பட்டுள்ளார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அமலாக்கத்துறை கைது செய்து, கைதி எண் கொடுக்கப்பட்டவர் எப்படி அமைச்சராக தொடர முடியும். அமைச்சராக இருக்கும்போது செந்தில்பாலாஜி விசாரணைக்கு எப்படி ஒத்துழைப்பார். அமைச்சரவையில் இருந்து செந்தில்பாலாஜியை நீக்க வேண்டும் என்பதே அதிமுகவின் நிலைப்பாடு. அதற்காக தான் ஆளுநரை சந்தித்து அதிமுக சார்பில் மனு அளித்தோம். அமைச்சராக இருந்தால் விசாரணை பாதிக்கும். பல உண்மைகள் வெளிவராமல் போக நேரிடும். உச்சநீதிமன்ற உத்தரவுபடி அமலாக்கத்துறை செந்தில்பாலாஜியை கைது செய்துள்ளது. ஒரு கைதி எப்படி அமைச்சரவையில் நீடிக்க முடியும் என்பது தான் கேள்வி?. இவ்வாறு கூறியுள்ளார்.