பாஜகவுடன் கூட்டணி கிடையாது...ரெய்டுகளுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் - ஜெயக்குமார் அதிரடி

 
jayakumar

அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறைந்த முன்னாள் முதலமைச்சர் அண்ணாவை பற்றி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கடந்த 18ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்,  நாங்கள் தெய்வமாக வணங்கும் அண்ணாவை சிறுமைப்படுத்தும் வகையில் பேசியதை பொறுத்துக் கொள்ளவே முடியாது. பாஜகவால் இங்கு காலூன்றவே முடியாது. எங்களவை வைத்து தான் உங்களுக்கு அடையாளமே கிடைத்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. தேர்தல் வரும்போது அதுபற்றி முடிவெடுத்துக்கொள்ளலாம். எங்கள் கூட்டணியில் பாஜக இல்லை. இதுதான் எங்கள் முடிவு. இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு என கூறினார். இதனையடுத்து இரு கட்சிகளை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் விமர்சித்து வருகின்றனர். இதனால் அதிமுக-பாஜக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

jayakumar

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்று கருத்தும் இல்லை. கடந்த 18ஆம் தேதி எடுத்த நிலைப்பாட்டில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை, நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், தற்போது வேறு எதுவும் கூற இயலாது. பாஜக - அதிமுக இடையே கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை. ரெய்டு பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அதிமுகவினர் பயப்பட மாட்டார்கள். நாளை நடக்கும் மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில்,  அதிமுகவின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு கூறினார்.