தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் - செல்லூர் ராஜூ

 
sellur raju

எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார். 

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இடைத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக இன்று ஈரோட்டிற்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:  தி.மு.க. ஆட்சிக்கு வந்து 21 மாதங்கள் ஆகி விட்டது. ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எந்த திட்டங்களும் நிறைவேற்றவில்லை. நமது ஆட்சியில் கொண்டு வந்த ஊராட்சி கோட்டை குடிநீர் திட்டம் முறையாக செயல்படுத்தப்படவில்லை. 33 வார்டுகளுக்கு பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட தி.மு.க. அமைச்சர்கள் இதுவரை எந்த ஒரு துரும்பையும் ஈரோட்டுக்கு கிள்ளி கூட போடவில்லை. காரில் பவனி வருகிறார்கள். சொத்து வரி, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, குடிநீர் கட்டண வரி என பல்வேறு வரி உயர்வினாலும், விலைவாசி ஏற்றத்தாலும் மக்கள் கடும் துயரத்தில் உள்ளனர். நூல் விலை உயர்வினால் விசைத்தறி தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கின்றனர். 

விடியல் தருவேன் என கூறி மக்களை ஏமாற்றி 505 வாக்குறுதிகளை தந்து எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டிருக்கும் தி.மு.க. அரசுக்கு மக்கள் இடைத்தேர்தலில் தகுந்த பாடம் புகட்டுவார்கள். தொகுதியெங்கும் தி.மு.க. காரர்கள் தான் உள்ளனர். கண்ணுக்கெட்டிய தூரம் காங்கிரஸ்காரர்களை காணவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.