மினி பட்ஜெட்டை செலவு செய்து இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர் - செல்லூர் ராஜூ

 
sellur raju

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுகவினர் வெற்றியை விலைக்கு வாங்கியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். 

மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு பயந்து திமுகவின் 30 அமைச்சர்களையும் முழு நேரமும் பணியாற்ற வைத்து பரிசு பொருட்கள், 1000, 500 பணம், இறைச்சி என அனைத்தையும் வாரி இறைத்து திமுக இந்த வெற்றியை பெற்று இருக்கிறது. இதனை சாதாரணமாக கிடைத்த வெற்றி என்று கருத முடியாது. ஈரோடு இடைத்தேர்தலில் பணநாயகம் வெற்றி பெரும் என ஈவிகேஎஸ் இளங்கோவன் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அதிமுகவை பார்த்து முதல்வர் பயந்துள்ளார். கடந்த 28 நாட்களாக முப்பது அமைச்சர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தனர். ஈரோடு பொது மக்களை கூடாரங்கள் அமைத்து அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான உணவுகளும், பணமும் வழங்கினர். 

ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டன், கோழிக்கறி வாங்கிக் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர். பணத்தை வைத்து திமுக வெற்றி பெற்றுள்ளது. தமிழ்நாட்டின் மினி பட்ஜெட்டை செலவு செய்து திமுக ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றி அடைந்துள்ளது. ஈரோடு மக்களும் அனைத்தையும் பெற்றுக் கொண்டு விசுவாசத்துடன் திமுக கூட்டணிக்கு வாக்கை செலுத்தி உள்ளனர். இதனை திமுகவினர் ஆகா ஓகோ என்று கொண்டாடக் கூடாது. அதிமுக பெரிய வெற்றிகளையும், தோல்விகளையும் கண்டுள்ளது. வெற்றியடைந்தால் கொண்டாடவும் தோல்வியை கண்டு துவண்டு போவதும் இல்லை. இவ்வாறு கூறினார்.