இடைத்தேர்தல் தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக அமையும் - செங்கோட்டையன்

 
Sengottaiyan

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக அமையும் என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இதனிடையே இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில், ஈரோட்டில் இன்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: அதிமுக ஆட்சியி மடிக்கணினி, மிதிவண்டிகள், தாலிக்கு தங்கம், ஸ்கூட்டி, கறவை மாடுகள், ஆடுகள் என பல உதவிகள் மக்களுக்கு செய்யப்பட்டன. ஆனால் தி.மு.க. அரசு அனைத்தையும் நிறுத்திவிட்டது. மாறாக வீட்டு வரி, மின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டது. எனவே தி.மு.க. அரசை எச்சரிக்கும் விதமாக தேர்தல் அமையட்டும். அ.தி.மு.க.வை மக்கள் ஆதரிக்க வேண்டும். திண்டுக்கல் இடைத்தேர்தல் எம்.ஜி.ஆருக்கும், மதுரை கிழக்கு மற்றும் மருங்காபுரி தேர்தல்கள் ஜெயலலிதாவுக்கும், ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதேபோல் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் எடப்பாடி யாருக்கு திருப்பு முனையாக அமையும். இவ்வாறு பேசினார்.