டெல்டா மாவட்டங்களில் ரூ.655 கோடி மதிப்பிலான புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல்!!

 
tn

மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்து, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ.655 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து,அரசு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (4.3.2024) மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 308 கோடியே 88 இலட்சம் ரூபாய் செலவில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 88 கோடியே 62 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு 143 கோடியே 46 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை திறந்து வைத்தல்

tn

மயிலாடுதுறை, மன்னம்பந்தலில் தரைத்தளம் மற்றும் ஏழு தளங்களுடன் 2,82,883 சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார். மயிலாடுதுறை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் 19.1.2022 அன்று அடிக்கல் நாட்டப்பட்டு, விரைந்து கட்டி முடிக்கப்பட்டு இன்றையதினம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் தரைத்தளத்தில், காப்பறை, மாவட்ட கருவூல அலுவலகம், மக்கள் குறைத்தீர்ப்பு மனுக்கள் பெறும் அரங்கம், மைய ஆவணங்கள் காப்பகம், வருவாய் பதிவு அறை, சிறப்பு துணை ஆட்சியர் (சமூக சேவை திட்டம்), ஊடக அறை, மருந்தகம் / மருத்துவ காப்பீடு அலுவலகம், அஞ்சல் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத்திறனாளிகளின் மறுவாழ்வு அலுவலகம், மறுவாழ்வு மையம்; முதல் தளத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அறை, மாவட்ட வருவாய் அலுவலகம், கூட்டரங்கம், சிறு கூட்டரங்கம், காணொளி காட்சி அறை, மாவட்ட ஆட்சியர் பொதுப்பிரிவு, வருவாய் பிரிவு, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர், தலைமை சர்வேயர், தேசிய தகவல் மையம்; இரண்டாம் தளத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட வழங்கல் அலுவலகம், தேர்தல் துறை, இந்திய நிர்வாக சேவை பயிற்சி மையம், வருவாய் நீதிமன்ற தனித்துணை ஆட்சியர், சுரங்கங்கள் அலுவலக உதவி இயக்குநர், சிறு தொழில் அலுவலகம், சமூக மேம்பாட்டுக்குழு முதுகலை ஆராய்ச்சி மையம், சட்ட அலுவலகம், அனைத்து வருவாய் பிரிவுகள் அலுவலகம்;

மூன்றாம் தளத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் அலுவலகம், உதவி இயக்குநர், பஞ்சாயத்து அலுவலகம், கணக்காய்வு அலுவலகம், செயற்பொறியாளர் ஊரக வளர்ச்சி அலுவலகம், கலந்தாய்வு மாநாட்டுக் கூடம்; நான்காம் தளத்தில், முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அலுவலகம், தலைமை நிர்வாக அதிகாரி, சிறு தொழில் கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகம், தலைமை கல்வி அலுவலகம், கூட்டரங்கம், வேளாண் வணிக விவசாய வியாபார அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், வேளாண்மைத் துறை அலுவலகம்; ஐந்தாம் தளத்தில், மருத்துவ அலுவலகம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், மருத்துவ வாரியம், கூட்டுறவு அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவலகம், குழந்தைகள் மாட்சிமை அதிகாரி, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம்;

ஆறாம் தளத்தில், மாவட்ட தொழிலாளர் அலுவலகம், தொழிலாளர் நீதிமன்றம், வீட்டு வசதி வாரிய அலுவலகம், பால் பண்ணை அலுவலகம், மாவட்ட தீயணைப்பு துறை, கால்நடை பராமரிப்பு அலுவலகம், பட்டுப்புழு வேளாண்மை அலுவலகம், செயற்பொறியாளர் வீட்டு வசதி வாரியம், போதைப்பொருள் கட்டுப்பாட்டு உதவி இயக்குநர், நிலம் மற்றும் நில அளவை பதிவு அலுவலகம், மாவட்ட மைய நூலகம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகம், கூட்டரங்கம், உள்ளூர் திட்டமிடல் ஆணைய அலுவலகம், செயற்பொறியாளர் அலுவலகம்; ஏழாம் தளத்தில், உணவு பாதுகாப்பு அலுவலகம், மின்சார அறை, ஆண்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், ஆவின், சுற்றுலா அலுவலகம், தமிழ்நாடு நீர் வழங்கல் வடிகால் வாரியம், கூட்டரங்கம், கைத்தறி அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 4 மின் தூக்கிகள், வாகன நிறுத்துமிடம், மழைநீர் வடிகால் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தல்

tn

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 4 கோடியே 72 ஆயிரம் ரூபாய் செலவில் சீர்காழி வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, மயிலாடுதுறை மற்றும் சீர்காழி வட்ட குறுவட்ட அளவர் குடியிருப்புகள்;

கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் செம்பனார் கோவிலில் 48 இலட்சத்து 35 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள கால்நடை மருந்தகம்; கலை பண்பாட்டுத் துறை சார்பில் தாடாளன் கோவிலில் 1 கோடியே 10 இலட்சம் ரூபாய் செலவில் அரசினர் இசைப்பள்ளி;

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 3 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை நகராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம், திருவெண்காடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த புற நோயாளிகள் பிரிவு மற்றும் சித்த மருந்தகக் கட்டடங்கள், பெருந்தோட்டத்தில் துணை சுகாதார நிலையம், மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவமனையில் ஒலி புகா அறை;

நெடுஞ்சாலைத் துறை சார்பில் 12 கோடியே 51 இலட்சம் ரூபாய் செலவில் பெரிய மற்றும் சின்ன வகுப்பு சாலையில் பாலம் கட்டும் பணி, மாப்படுகை கடலங்குடி சாலை, மேமாத்தூர்-உத்திரங்குடி கண்டியூர் – புதுத்தெரு ஆகிய இடங்களில் பாலங்கள்;

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 71 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை நகராட்சியில் மாமரத்து மேடை குளம், அங்காளம்மன் குளம், ஆழிக்குளம், அறுபத்திமூவர் பேட்டை குளம், செத்தங்குடிராஜா குளம், வரதாச்சாரியார் பூங்கா, மாருதி நகர் விரிவாக்கம் பூங்கா, குமரன் பூங்கா, தாமரைக்குளம், அக்கனாங்குளம், சுப்ரமணியபுரம் பூங்கா, சீர்காழி நகராட்சியில் கோவில் பத்து காமராஜ் குளம், காந்தி பூங்கா கரிக்குளம், குத்தாலம் பேரூராட்சியில் கே.ஆர்.எஸ். நகர் பூங்கா ஆகிய இடங்களில் மேம்படுத்தப்பட்ட குளங்கள் மற்றும் பூங்காக்கள், திம்மனாயக்கம் படித்துரை மயானத்தை LPG கிரிமிடோரியமாக முடிக்கப்பட்ட பணி, மயிலாடுதுறை பெரியார் மருத்துவமனை வளாகத்தில் உட்புற நோயாளி உடன் தங்குவோர் தங்குமிடம், மேலச்செட்டித் தெருவில் மேம்படுத்தப்பட்ட பொதுக் கழிப்பிடம், பேரூராட்சிக்கு தெருக்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்ட பணிகள்; ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் 4 கோடியே 54 இலட்சத்து 78 ஆயிரம் ரூபாய் செலவில் செம்பனார்கோயில், காட்டுச்சேரி ஊராட்சியில் 100 சமத்துவபுர வீடுகள் புனரமைப்பு மற்றும் 9 உட்கட்டமைப்பு பணிகள்; என மொத்தம் 150 கோடியே 42 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறை மாவட்டத்தில் 34 முடிவுற்ற திட்டப் பணிகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.