இன்று முதல் அமல் : இனி RTO அலுவலகங்களுக்கு நேரில் செல்ல அவசியம் இல்லை..!
சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் புதிய வாகனங்களை பதிவு செய்வதற்கு, இனி வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு நேரில் வாகனத்தை கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த புதிய நடைமுறை இன்று டிசம்பர் 1 முதல் அமலுக்கு வருகிறது. இதுவரை, நாம் ஷோரூமில் புதிய பைக் அல்லது கார் வாங்கினாலும், அதை பதிவு செய்வதற்காக ஒருநாள் மெனக்கெட்டு ஆர்டிஓ அலுவலகத்திற்கு எடுத்து செல்ல வேண்டியிருந்தது. சமீப காலமாக டீலர்களே இதனை செய்து வந்தனர். ஆனால் அதற்கு கூடுதல் பணம் கொடுக்க வேண்டும். அங்கு வாகன ஆய்வாளர் வாகனத்தை நேரில் ஆய்வு செய்த பிறகே பதிவு எண் வழங்கப்படும். ஆனால், இந்த நீண்ட கால நடைமுறைக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தங்கள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் அடிப்படையில், தமிழக போக்குவரத்து துறை ஆணையர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இதன்படி:
- சொந்த பயன்பாட்டிற்காக வாங்கப்படும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட கார் மற்றும் பைக்குகளை இனி ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு செல்ல தேவையில்லை.
- வாகனத்தை விற்பனை செய்யும் டீலர்களே, Vahan இணையதளம் மூலம் வாடிக்கையாளர்களின் ஆவணங்களை பதிவேற்றி, ஆன்லைனில் பதிவு செய்துவிடுவார்கள்.
- வாடிக்கையாளரின் ஆதார் விவரங்கள் மூலம் சரிபார்க்கப்பட்டு, பதிவுக்கட்டணம் மற்றும் சாலை வரி ஆன்லைனிலேயே செலுத்தப்படும். பின்னர் பதிவு எண் தானாகவே ஒதுக்கப்படும்.
இந்த சலுகை சொந்தபயன்பாட்டிற்காக வாங்கப்படும் வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும். வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் மஞ்சள் பலகை வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் பேருந்துகள் போன்றவற்றை தொடர்ந்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்ய வேண்டும். அதே போல், வாகனத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் நேரடி ஆய்வு அவசியம்.
இந்த மாற்றத்தால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளன.ஆர்டிஓ அலுவலகத்தில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவசியம் இனி இல்லை.ஷோரூமில் இருந்து வாகனத்தை ஆர்டிஓ அலுவலகத்திற்கு கொண்டு சென்று வரும் அலைச்சல் குறையும்.இடைத்தரகர்களின் ஆதிக்கம் குறைந்து, பதிவு நடைமுறை முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும்.
தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 8,000-க்கும் மேற்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. இந்த புதிய திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான வாகன ஓட்டிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


