பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக - அண்ணாமலை

 
annamalai

பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூகவலைத்தள பக்கத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு முறையின்படி, தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், பார்வைத்திறன் மாற்றுத் திறனாளர்களுக்கு 1% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் மாற்றுத் திறனாளர்கள், பல ஆண்டுகளாக கோரிக்கைகள் வைத்து வருகிறார்கள்.

Annamalai

முறையான கல்வித் தகுதியும், தகுதித் தேர்வில் வெற்றியும் பெற்று, பல ஆண்டுகளாகக் காத்திருந்தும், தங்களுக்கான இட ஒதுக்கீட்டை வழங்காமல் வஞ்சித்து வரும் தமிழக அரசை வலியுறுத்தி, கடந்த ஆறு நாட்களாக சென்னையில் போராட்டம் நடத்திய பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்கள் நேற்றைய தினம் திமுக அரசால் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

போலி சமூக நீதி பேசி, ஆண்டாண்டு காலமாக மக்களை ஏமாற்றி வரும் திமுக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இடஒதுக்கீடு நடைமுறையை அமல்படுத்துவதில் எதற்காகத் தயங்குகிறது என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமின்றி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாற்றுத் திறனாளர்களுக்கான ரூ.1000 உதவித் தொகையை உயர்த்துவதாக அறிவித்தது முதல், பல மாவட்டங்களில் உதவித் தொகை வழங்கப்படவே இல்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்திருக்கிறது. உண்மையில் இந்த திமுக அரசு யாருக்காக நடத்தப்படுகிறது? 


உடனடியாக, பார்வைத் திறன் மாற்றுத் திறனாளர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று, அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன். பணம் வசூலிக்கலாம் என்பதற்காக மாற்றுத் திறனாளர்கள் பணி நியமனங்களைக் காலதாமதப்படுத்தும் எண்ணம் இருந்தால், துறையற்ற அமைச்சர்களின் இன்றைய நிலையை பணிவன்புடன் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.