கூமாப்பட்டி பிளவக்கல் அணையின் பூங்கா மேம்பாட்டுக்கு நிதி ஒதுக்கீடு!
புகழ்பெற்ற கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அம்மாவட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து அறிவிப்பை வெளியிட்டார். அதில் இணையத்தில் அதிகம் கொண்டாடப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள கூமாப்பட்டியில் அமைந்துள்ள பிளவக்கல் அணை சுற்றுலாத்தலமாக தரம் உயர்த்தப்படும், பூங்கா மேம்படுத்தப்படும் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி தற்போது தமிழக அரசு கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

மலைகள், நீர்நிலைகள் என இயற்கை எழில் சூழ்ந்த சிறிய கிராமம் தான் கூமாப்பட்டி. இந்த கிராமத்தில் அமைந்துள்ள பிளவக்கல் அணையை மேம்படுத்த வேண்டும், கூமாப்பட்டியை சிறந்த சுற்றுலா தளமாக மாற்ற வேண்டும் என அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிளவக்கல் அணையில் சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் , பூங்கா மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள தற்போது தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது.


