சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் - 18,500 போலீசார் பாதுகாப்பு

 
திட்டமிட்டபடி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும்- இந்து முன்னணி

சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில், 18,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.  கரைக்கலாம் என சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் இந்துக்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபட்டனர். சென்னை பெருநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 1,343 விநாயகா் சிலைகளும், தாம்பரம் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட பகுதியில் 693 விநாயகா் சிலைகளும் வைத்து வழிபாடு செய்யப்பட்டன. அவ்வாறு பொது இடங்களில் வைத்து வழிபாடு செய்யப்படும் சிலைகள் கடலில் கரைக்கப்படுவது வழக்கம். சென்னையில் வைக்கப்பட்ட சிலைகளை பட்டினப்பாக்கம், நீலாங்கரை, காசிமேடு துறைமுகம், திருவொற்றியூர் ஆகிய இடங்களில் கரைக்கலாம் என மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் நாளை விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடைபெறவுள்ள நிலையில்,  ஊர்வலங்களில் எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருப்பதற்காக 18,500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

விநாயகர் சிலை

இதேபோல் சிலைகளை கரைப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இயற்கையான, எளிதில் மக்கக்கூடிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்கள் அதாவது களிமண், காகிதக்கூழ், இயற்கை வண்ணங்கள் போன்றவற்றை கொண்டு செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும். சிலைகள் கரைக்கப்படுவதற்கு முன்பு சிலைகளில் அலங்கரிக்கப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், இலைகள், செயற்கை ஆபரணங்கள் போன்றவை அகற்றப்பட வேண்டும். அவ்வாறு அகற்றப்பட்ட சிலைகள் மட்டுமே பாதுகாப்பான முறையில் குறிப்பிடப்பட்ட இடங்களில் கரைக்க வேண்டும். 

சிலைகள் கரைக்கப்படும் இடத்தில் சேகரிக்கப்படும் துணிகள், பூ மாலைகள், இலைகள், அலங்காரப்பொருட்கள் போன்றவை முறையாக சேகரிக்கப்பட்டு 24 மணி நேரத்திற்குள் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளால் அகற்றப்பட்டு திடக் கழிவு மேலாண்மை விதிகளின்படி கையாளப்பட வேண்டும். சிலைகளில் இருந்து அகற்றப்பட்ட துணிகள், பூ மாலைகள், அலங்கார தோரணங்கள், மூங்கில்கள் போன்றவற்றை நீர்நிலைகளின் கரை ஓரங்களில் கொட்டி, தீயிட்டு எரிப்பது கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.