கேட் நுழைவு தேர்வு : ஆக.24 முதல் விண்ணப்பிக்கலாம்..
முதுநிலை பொரியியல் படிப்புகளில் சேர்வதற்கான கேட் நுழைவுத் தேர்வுக்கு ஆகஸ்ட் 24ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதுமுள்ள ஐஐடி, ஐஐஎம், என்.ஐ.டி உள்ளிட்ட மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு கேட் (Graduate Aptitude Test in Engineering) என்னும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதேபோல் குறிப்பிட்ட சில தனியார் உயர்கல்வி நிறுவனங்களும் கேட் மதிப்பெண் மூலம் மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. அதனால் இத்தேர்வானது பட்டதாரிகளுக்கு இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்த கேட் நுழைவுத் தேர்வு இயந்திரவியல், கட்டிடவியல் உட்பட 30 பொறியியல் பாடப்பிரிவுகளில் கணினி வழியில் நடத்தப்படுகிறது. மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு இந்த தேர்வு 3 மணி நேரம் வரை நடைபெறும். தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 3 ஆண்டுகள் வரை இந்த மதிப்பெண் செல்லுபடியாகும்.
இந்த நிலையில் 2025-ம் ஆண்டுக்கான கேட் தேர்வு வரும் பிப்ரவரி 1, 2 மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் பாடப்பிரிவு வாரியாக காலை, மதியம் என இருவேளைகளிலும் நடைபெற உள்ளது. இந்த முறை கேட் தேர்வை ரூர்க்கி ஐஐடி நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு மையங்கள் 8 மண்டகங்களாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
மேலும், கேட் தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு வருகிற ஆகஸ்ட் 24-ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதையடுத்து விருப்பமுள்ள பட்டதாரி மாணவர்கள் https://gate2025.iitr.ac.in/ எனும் வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
செப்டம்பர் 26ம் தேதிக்கு விண்ணப்பிக்கும் வாய்ப்பை தவறவிடுபவர்கள் தாமதக் கட்டணத்தை செலுத்தி அக்டோபர் 7-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மட்டுமின்றி தற்போது பொறியியல் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் 2025ம் ஆண்டுக்கான கேட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.