இனி பள்ளிகளில் காயத்ரி மந்திரம் கட்டாயம்: பா.ஜ.க அரசு உத்தரவுக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு!
சத்தீஸ்கரில் முதல்வர் விஷ்ணு தியோ சாய் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, மாநில கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகள், புதிய கல்வியாண்டிற்காக நேற்று திறக்கப்பட்டன.முன்னதாக, பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் கடந்த 12ம் தேதி சுற்றறிக்கை அனுப்பப்பட்டது.
அதன் விபரம்: இனி பள்ளிகளில், ஒரு நாளில் மூன்று வெவ்வேறு நேரங்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள்: காலை வழிபாட்டுக் கூட்டத்தில் தேசிய கீதம், தீப மந்திரம், சரஸ்வதி வந்தனம், குரு மந்திரம் மற்றும் சிறந்த ஆளுமைகளின் வாழ்க்கை வரலாறு வாசிப்பு ஆகியவை இடம்பெற வேண்டும்.
மதிய உணவு இடைவேளையின்போது, மாணவர்கள் அனைவரும் இணைந்து உணவுக்கான பிரார்த்தனையை மேற்கொள்ள வேண்டும். அதேபோல், பள்ளி நேரம் முடியும்போது, காயத்ரி மந்திரம், சாந்தி மந்திரம் ஆகியவற்றை பாட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையை அனைத்து பள்ளிகளும் கட்டாயம் பின்பற்றுவதை மாவட்ட கல்வி அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என சத்தீஸ்கர் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுக்கு, காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அக்கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பள்ளிகளில், பிற மதங்களைச் சேர்ந்த மாணவர்களும் படிக்கின்றனர். 'அவ்வாறு இருக்கும்போது ஹிந்து மத பிரார்த்தனைகளை கட்டாயமாக்குவதன் மூலம், ஆர்.எஸ்.எஸ்., கொள்கையை பள்ளிகளில் திணிக்க பா.ஜ., அரசு முயற்சிக்கிறது. எனவே, இந்த உத்தரவை மாநில அரசு உடனே திரும்ப பெற வேண்டும்' என, குறிப்பிட்டு உள்ளது.

