ஹெலிகாப்டர் விபத்து: விரைந்து நடவடிக்கை எடுத்த ஸ்டாலின் - நன்றி தெரிவித்த ராணுவ அதிகாரி..

 
லெப்டினர் ஜெனரல் அருண், மு,க.ஸ்டாலின்

நீலகிரி ஹெலிகாப்டர் விபத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராணுவ அதிகாரி அருண் நன்றி தெரிவித்துள்ளார்.


நீலகிரி மாவட்டம்  குன்னூரில் முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் 12 ராணுவ உயர் அதிகாரிகள் பயணித்த உயர் ரக ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. இதில் குரூப் கேப்டன் வருண் சிங்கை தவிர, மீதமுள்ள 13 பேரும் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியான உடன் நீலகிரி மாவட்ட ஆட்சியர் , தமிழக காவல் துறையினர், மீட்பு படையினர் என அனைவரும்  நிகழ்விடத்திற்குச் சென்று  துரித கதியில் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். அன்று  மாலையே தனி விமானம் மூலம்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்விடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார்.   

ஹெலிகாப்டர் விபத்து

மீட்கப்பட்ட 13 பேரது உடல்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் விமானம் மூலம் டெல்லி அனுப்பிவைக்கப்பட்டது. ஏற்கெனவே ஹெலிகாப்டர் விபத்தின் போது சிறப்பாக பணியாற்றியதாக முதமலைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமானப்படை சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ராணுவ அதிகாரி நன்றி தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ சென்னை தக்ஷின் பாரத் ஜெனரல் ஆபிசர் கமாண்டிங் லெப்டிணட் ஜெனரல் அருண் அவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம் பின்வருமாறு :   

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

'நீலகிரி மாவட்டத்தில் டிச.8-ம் தேதி நடந்த ஹெலிகாப்டா் விபத்தில் இந்திய ராணுவத்தினா் 13 போ் உயிரிழந்த துயரமான நேரத்தில், அவா்கள் குடும்பத்தினருக்கு தாங்கள் அருகில் இருந்து ஆறுதல் அளித்தமைக்கு எனது மனமாா்ந்த நன்றியையும், இதயப்பூா்வமான பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.தகவல் அறிந்த உடனே- நெஞ்சை நெகிழ வைக்கும் வகையில் தாங்கள் விரைந்து வந்து, இறந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு, அவா்கள் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, ஆயிரக்கணக்கான ராணுவ வீரா்கள், ராணுவ உயா் அலுவலா்கள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரின் இதயத்தில் ஆழமாக இடம்பிடித்து விட்டீா்கள்.

ஸ்டாலினுக்கு நன்றி கடிதம்

அந்தத் தருணத்தில் எந்தெந்த உதவி முடியுமோ அந்த உதவிகளை எல்லாம் தங்களின் தலைமையின் கீழ் உள்ள தமிழக அரசின் மொத்த நிா்வாகமும் செய்து தந்தது. இதுபோன்ற ஆதரவுகள்தான் எதிா்காலத்தில் நம் இளைஞா்கள் தாமாக முன்வந்து ராணுவத்தில் சேருவதற்கும், ராணுவ உடை அணிவதற்கும், உற்சாகமூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் அமையும்.

தக்ஷின் பாரத் பகுதியின் தலைமை அலுவலா் என்ற வகையில் தங்களுடைய முன்மாதிரியான ஆதரவுடன் பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். உங்களுடைய இந்த செயல், பணியில் இருக்கும் ராணுவ வீரா்களுக்கும், மூத்த ராணுவ வீரா்களுக்கும் தமிழக அரசு நமக்கு ஆதரவாக இருக்கின்றது என்ற உணா்வை ஏற்படுத்தி, ஊக்கத்தை அளிப்பதோடு தேவைப்படும் காலங்களில் அவா்களுக்கு இந்த அரசு மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது.இந்த கடினமான சூழ்நிலையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்ததற்கு தங்களுக்கும் அனைத்து அரசு அலுவலா்களுக்கும்-நம் மாநிலத்துக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டாலினுக்கு ரானுவம் நன்றி கடிதம்