திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு..

 
திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழப்பு..

திருப்பதியில் சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும்  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்களில் சிலர் அலிபிரி மற்றும் ஸ்ரீ வாரி மெட்டு மலைப்பாதையில் நடந்தே சென்று தரிசனம் செய்வர்.  இந்த அலிபிரி மலைப்பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதால் அங்குள்ள வனவிலங்குகள் அடிக்கடி நடை பாதைக்கு வந்து பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம் போத்தி ரெட்டி பாளையத்தை சேர்ந்த தினேஷ் குமார் என்பவர்,  மனைவி சசிகலா , மகள் லக்‌ஷிதா (வயது 6) மற்றும் மகன் தினேஷ்குமார் ஆகியோருடன்  நேற்று இரவு 7. 30 மணி அளவில்  அலிபிரி நடைபாதையில் நடந்து சென்றுள்ளார்.

சிறுத்தை

நரசிம்ம சாமி கோவில் அருகே நடந்து சென்றுகொண்டிருந்தபோது, சிறுமி  லக்‌ஷிதா திடீரென காணாமல் போனதாக கூறப்படுகிறது. இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர், பக்தர்கள் கூட்டத்தில் மகளை தேடி அலைந்துள்ளனர்.  நீண்ட நேரமாகியும் மகள் கிடைக்காததால்  பதற்றம் அடைந்த பெற்றோர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர்  காவல்துறை மற்றும் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் இரவு முழுவதும் சிறுமி  லக்‌ஷிதாவை வனப்பகுதி முழுவதும் தேடி வந்தனர். மலைப்பாதையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், சிறுமி பெற்றோருக்கு முன்பாக தனியாக நடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தது.

பின்னர் கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சிறுமி லக்‌ஷிதா  நரசிம்ம சாமி கோவில் அருகே ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்துள்ளார்.. சிறுமியின் உடல் அருகே சிறுத்தையின் சாணம் கிடந்ததை அடுத்து,  சிறுத்தை தான் சிறுமையை இழுத்துச் சென்று அடித்து கொன்றிருக்கும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.  சிறுத்தை தாக்கி சிறுமி உயிரிழந்த சம்பவம்  பொதுமக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.