சிறுமிக்கு பாலியல் தொல்லை விவகாரம்: விடுதியின் கேட் பூட்டபடவில்லை - காவல்துறை தகவல்..
மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த தாம்பரம் அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
சென்னை தாம்பரம் அடுத்த சானிடோரியம் சர்ச் காலனி பகுதியில் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு சேவை இல்லம் மற்றும் மகளிர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 128 மாணவிகள் மற்றும் பெண்கள் உள்ளனர். இந்த விடுதியில் 13 வயது சிறுமி ஒருவர் தங்கி அங்குள்ள அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை அரங்கேறியுள்ளது. சிறுமி கொடுத்த புகாரின்பேரில் காப்பகத்தின் காவலாளி மேத்யூ கைது செய்யப்பட்டார்.
வாயில் துணியை வைத்து மூடி சிறுமியை தூக்கிச்சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற நிலையில், சிறுமி கூச்சலிடவே அருகிலிருந்த கம்பியால் சிறுமியின் காலில் கடுமையாக தாக்கிவிட்டு விடுதியின் காவலாளி மேத்யூ தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மேத்யூ மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த போலீஸார் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதில், தாம்பரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை நடந்த அரசு விடுதியில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இரண்டு சிசிடிவி கேமராக்களை தவிர வேறு எதுவும் செயல்படவில்லை எனவும், ஒரு ஆண் காவலாளி மட்டும் 12 மணி நேரத்திற்கு மேலாக பணியில் இருந்துள்ளார் என்றும், பெண் காப்பாளர் விடுப்பில் இருந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 10அடி உயரம் கொண்ட மதில் சுவரில் ஆங்காங்கே முள்வேலிகள் உடைந்துள்ளதாகவும், பெண்கள் தங்கும் விடுதிக்கு செல்லும் வழியில் கான்கிரீட் போடப்பட்டுள்ளதால் கேட் பூட்டப்படவில்லை எனவும் காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. காப்பகத்தில் போதிய பாதுகாப்பு இல்லாததால் இத்தகைய சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும், தொடர்ந்து வழக்கு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


