"மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு அதிகாரம் வழங்குங்கள்" - ராமதாஸ் கோரிக்கை

 
PMK

மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் வழங்குங்கள். உங்களுக்கு சமூகநீதி தானாக கிடைக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், சமத்துவமான சமுதாயம் அமைக்க அடிப்படை சமூகநீதி தான். சமூகநீதி என்ற மாபெரும் அரங்கத்தின் தூண்கள் தான் இட ஒதுக்கீடு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு போன்றவை. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான அடித்தளம் நூற்றாண்டுக்கு முன்பே அமைக்கப்பட்டு விட்டது. அதன் பயனாக சமூகநீதியின் தொட்டில் என்று தமிழ்நாடு போற்றப்பட்டது. 1927&ஆம் ஆண்டிலேயே 100%  இடப்பங்கீடு வழங்கிய ஒரே மாநிலம் அன்றைய சென்னை மாகாணம் தான். அப்போதே பட்டியலினத்தவரில் தொடங்கி பிராமணர்கள் வரை அனைவருக்கும் இடப்பங்கீடு வழங்கப்பட்டது.ஆனால், அவையெல்லாம் இன்று பழங்கதையாகி விட்டன. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு ஆபத்து, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மறுப்பு என சமூகநீதியின் அடித்தளங்கள் அனைத்தும் ஆட்டம் காணத் தொடங்கியிருக்கின்றன. சமூகநீதியை வலுப்படுத்த வேண்டுமானால், சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான் ஒரே தீர்வு என்று பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வருகிறது. ஆனால்,  சமூகநீதியைப் பற்றி அறியாத தமிழக அரசின் செவிகளில் இந்தக் குரல் விழவில்லை.

pmk


தமிழ்நாடு அரசு நினைத்தால் அதுவே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தலாம்; அதன் அடிப்படையில் இட ஒதுக்கீட்டின் அளவை அதிகரித்து வழங்கலாம். இதற்கான அதிகாரம் 2008&ஆம் ஆண்டு புள்ளியியல் சட்டத்தின் மூலம் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதை செயல்படுத்த தமிழக அரசுக்கு மனம் இல்லை.மாறாக, இந்தியா முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதிவிட்டு, அத்துடன் தமது கடமை முடிந்து விட்டதாக நாடகமாடிக் கொண்டு  இருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். சமூகநீதி மீதான இவர்களின் அக்கறை இவ்வளவு தான்.

pmk
தமிழ்நாட்டில் வழங்கப்படும் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட வேண்டும், ஒவ்வொரு சமூகத்திற்கும் அவர்களின் மக்கள்தொகைக்கு இணையான இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும், அரசுத்துறை பணிகள் மட்டுமின்றி, தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும், இட ஒதுக்கீடு மட்டுமின்றி, அரசின் ஒப்பந்தங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் தலைவர் நியமனங்கள் உள்ளிட்ட அனைத்திலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலினம் மற்றும் பழங்குடியின மக்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதில் பா.ம.க. உறுதியாக உள்ளது.தமிழ்நாட்டில், சமூகநீதி குறித்த இத்தகைய சிந்தனைத் தெளிவு எந்தக் கட்சிக்கும் கிடையாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் கிடைத்த போதெல்லாம் சமூகநீதிக் கொடியை பாமக தான் உச்சத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது. மாநில அளவிலும், தேசிய அளவிலும் மொத்தம் 6 இட ஒதுக்கீடுகளை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

PMK

அவற்றில் மாநில அளவிலான மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான 20% இட ஒதுக்கீடு, வன்னியர்களுக்கன 10.50% இட ஒதுக்கீடு, இஸ்லாமியர்களுக்கான 3.5% இட ஒதுக்கீடு, அருந்ததிய மக்களுக்கான 3% இட இதுக்கீடு ஆகியவை தமிழ்நாட்டில் போராடிப் பெறப்ப்பட்டவை. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் ஓபிசிகளுக்கு 27% இட ஒதுக்கீடு, மருத்துவப்படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பட்டியலினத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு ஆகியவை ம த்திய அரசில் அதிகாரம் கிடைத்ததால் பெற்றுத் தரப்பட்டவை.சமூக நீதியை வென்றெடுப்பதில் நாம் பயணித்திருக்கும் தொலைவு கொஞ்சம் தான். இன்னும் பயணிக்க வேண்டிய தொலைவு மிக அதிகம். சமூகநீதியின் அனைத்து அம்சங்களையும் வென்றெடுக்கும் திறன் பா.ம.க.வுக்கு உண்டு. ஆகவே, இளைஞர்களே, மக்களவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிகாரம் வழங்குங்கள். உங்களுக்கு சமூகநீதி தானாக கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.