"கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை"- ஈபிஎஸ் கருத்துக்கு ஜி.கே.வாசன் பதிலடி
சென்னை கிண்டியில் தீரன் சின்னமலை பிறந்த நாளை ஒட்டி அவரது சிலைக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி. கே.வாசன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “தமிழகத்தில் சட்டபேரவை கூட்டம் பெயர் அளவில் மட்டுமே நடைபெறுகிறது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழகத்தில் அதிமுக தலைமையில் ஆட்சி நடைபெறும். மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும். மொத்தத்தில் தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி என அமித்ஷா தெளிவுபடுத்தி உள்ளார். தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.
தமிழகத்தில் 2500 குவாரிகள், 3000 கிரஷர்கள் வேலை நிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் கட்டுமானம் தொழில் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக தமிழக அரசு இதை தலையிட்டு நல்ல முடிவை எடுக்க வேண்டும். கோவை திருப்பூர் மாவட்டங்களில் விசைதறி ஊழியர்கள் போராட்டம் செய்து வருகின்றனர். இதனால் ஜவுளி தொழில் பாதித்து உள்ளது, அரசு இதற்கு ஒரு குழு அமைத்து பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். புனித வெள்ளி அன்று மதுக்கடைகளை மூட வேண்டும் என கோரிக்கை வைக்கிறேன். பள்ளிகளில் மாணவர்கள் இடையே தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடைபெறுவது கவலைக்குரிய விஷயம். ஆசிரியர்கள், பெற்றோர் சங்கம் இணைந்து இதற்கு தீர்வு காண வேண்டும். டாஸ்மாக் ஊழல் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துகிறேன். தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் சிறப்பாக ஆண்டுகொண்டுள்ளது. அதன் அடிப்படையில் அதிமுக வெற்றி பெற கூட்டணி கட்சிகள் செயல்படும், மொத்தத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடைபெறும்” என்றார்.


