"ஸ்டாலின் பேச்சை தமிழக மக்கள் விரும்பவில்லை..." - ஜி.கே. வாசன் கருத்து!!

 
tn

தமிழக முதல்வர் ஸ்டாலின்  முக்கியப் பிரச்சனைகளை கோரிக்கை மனுவாக கொடுப்பதை விடுத்து விவாதத்திற்கு உட்படும் வகையில் உரையாற்றியிருப்பதை தமிழக மக்கள் விரும்பவில்லை  என்று ஜி.கே. வாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே. வாசன், "நேற்றைய தினம் பாரதப் பிரதமர் அவர்கள் தமிழகத்தின் சென்னை மாநகருக்கு வருகை புரிந்து தமிழக வளர்ச்சிக்கானத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதும் , நாட்டிற்கு அர்ப்பணித்ததும் தமிழக மக்கள் நலன் சார்ந்தது , தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உகந்தது , நாட்டின் பொருளாதாரம் உயரவும் வழி வகுக்கும் .  குறிப்பாக தமிழகத்தின் பெருமை , கலாச்சாரம் , தமிழ் மக்களின் திறமை ஆகியவற்றை எடுத்துக்கூறியது சிறப்பானது.

tn

மேலும் முக்கியமாக மருத்துவம் , தொழில் நுட்ப படிப்புகளை தமிழ் வழியில் படிக்கக்கூடிய நிலையை புதிய கல்விக்கொள்கை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் குறிப்பிட்டிருக்கிறார் . இலங்கைத் தமிழர்களுக்கு தொடர் உதவி செய்யப்படும் என்பதையும் தெரிவித்து நம்பிக்கை ஏற்படுத்தினார் . இப்படி தமிழக மக்கள் , தமிழ்நாடு ஆகியவற்றிற்காக தமிழ்நாட்டிற்கு வந்து திட்டங்களுக்கான விழாவில் விவாதத்திற்கு உட்படாத வகையில் உரையாற்றியது தமிழக மக்களுக்கான நன்மை பயக்கும் தனது பயண நோக்கத்தை மிகச்சிறப்பாக நிறைவேற்றினார் . 

tn

மாறாக தமிழக முதல்வர் அவர்கள் , தமிழகத்தின் முக்கியப் பிரச்சனையான பருத்தி நூல் விலை குறித்தும் , தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை குறித்தும் குறிப்பிடாமல் , உடனடித் தேவையான பருத்தி நூல் விலைக்குறைப்பை பற்றியும் உரையாற்றாதது ஏமாற்றத்தை அளித்திருக்கிறது .  அது மட்டுமல்ல விவாதத்திற்கு உட்படும் நீட் தேர்வு மற்றும் ஜிஎஸ்டி பற்றி குறிப்பிட்டிருக்கிறார் . அதாவது தமிழகத்தின் பிரச்சனைகளை , தேவைகளை எடுத்துக்கூறுவது கடமை என்றாலும் கூட அதை எழுத்துப்பூர்வமாக , கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம் . அதை விடுத்து முக்கியப் பிரச்சனைகளை பற்றி தமிழில் பேசியதால் உடனடியாக அது அந்த நேரத்தில் பிரதமர் அவர்களுக்கு தெரியாமல் , கருத்து தெரிவிக்காத நிலை ஏற்படும் . 

gk

குறிப்பாக காங்கிரஸ் , தி.மு.க ஆட்சியில் கச்சத்தீவு பறிபோனது . அதே கச்சத்தீவைப் பற்றி தமிழக முதல்வர் அவர்கள் பேசியதால் பா.ஜ.க அரசு கச்சத்தீவை மீட்கக்கூடிய நிலை ஏற்படும் என்பது வெளிப்படுகிறது . 
எனவே தமிழக முதல்வர் அவர்கள் நேற்றைய தின முக்கிய நிகழ்வான தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்ட விழாவில் விவாதப் பொருளாக்கும் வகையில் உரையாற்றியதை மக்கள் விரும்பவில்லை என்பதை த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன் . மேலும் தமிழகத்திற்கு பிரதமரின் வருகையால் தமிழக மக்கள் பெரும் பயனடைவார்கள் என்ற அதே வேளையில் தமிழக முதல்வர் அவர்கள் பருத்தி நூல் விலை பற்றி உரையாற்றி , முக்கியப்பிரச்சனைகளை ஆங்கிலத்தில் பேசி , கோரிக்கை மனுவாக கொடுத்திருக்கலாம் என்பதையும் த.மா.கா சார்பில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்' என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.