ஆன்லைன் சூதாட்டம் தடை செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்க!!

 
gk vasan

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டம் தடை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அளிக்கப்பட்ட தடை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து இருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை செய்து இயற்றப்பட்ட சட்டத்தில் சில செல்லும், சில செல்லாது என்று கூறியிருப்பது வருத்தத்திற்குரியது.

Rummy

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் வயது பாகுபாடின்றி பலர் ஈடுப்பட்டு, பணம், பொருள், சொத்தை இழந்து அவற்றில் இருந்து மீளமுடியாமல், கடன் தொல்லையாலும், அவமானத்தினாலும் 100-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துகொண்டதை அனைவரும் அறிவோம். தற்பொழுது ஒரிரு நாட்களுக்கு முன்னர் கூட ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்துகொண்ட செய்தி பத்திரிக்கையிலும், தொலைக்காட்சியிலும் வந்ததை அறிவோம்.

gk

ஆன்லைன் சூதாட்டத்தில் அதிஷ்டம் சார்ந்த விளையாட்டிற்கு தடை செல்லும் என்றும், ஆன்லைன் ரம்மி, திறமைக்கான விளையாட்டு, அதனால் அதற்கு தடை செல்லாது என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விஷத்தில் நல்ல விஷம், கெட்ட விஷம் எது. விஷம் என்றால் அது உயிரைக் கொல்லும். ஆகவே ஆன்லைன் விளையாட்டுக்கள் மக்களுக்கு கேடு விளைவிப்பதே. ஆகவே அவை முற்றிலும் தடைசெய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தினால் தற்கொலை செய்துகொண்ட குடும்பங்கள் பல சீரழிந்துள்ளது. இனிமேலும் இந்நிலை தொடரக்கூடாது. வருங்கால இளைஞர்களின் எதிர்காலம் காக்கப்பட வேண்டும். சட்டங்கள் மக்களை காப்பதற்காகவும், நல்வழிப்படுத்தவே இயற்றப்பட்டது. ஒருசில ஓட்டைகளை வைத்துக்கொண்டு மொத்த சமுதாயமே சீரழிய அனுமதிக்க கூடாது. உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.