"எங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன”- ஜி.கே.வாசன்

 
gk vasan gk vasan

 பீகார் வெற்றியை தொடர்ந்து  தமிழகத்தில் அதிமுக கூட்டணிக்கு வரும் தேர்தலில்  வெற்றி வாய்ப்பு  பிரகாசமாக உள்ளதாக சேலம் நெடுஞ்சாலை நகரில் முகாமிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பிறகு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சேலத்தில் அமைய உள்ள ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகளை நிறுவக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் நடத்தும் உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஜிகே வாசன் சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில்  தங்கி இருக்கும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை, நேரில் சந்தித்து சுமார் 40 நிமிடம் உரையாற்றினார். 

Middle-aged Indian man with gray hair, mustache, wearing glasses in right hand, white short-sleeve shirt, gesturing with raised right hand, neutral background.

பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய  ஜி.கே.வாசன், “தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் நாங்கள் சந்தித்தது மரியாதை நிமித்தமான சந்திப்பு என சொல்ல முடியாது , இது ஒரு அரசியல் ரீதியான சந்திப்பு தான். வரும் தேர்தலில் இன்னும் கூட்டணியை எப்படி வலு சேர்ப்பது என்பது குறித்து பேசினோம். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை 173 சட்டமன்ற தொகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து வந்துள்ளார்.  அவர் செல்லும் இடமெல்லாம் அவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. தமாக சார்பில் நான்கு மண்டலமாக பிரித்து மண்டல ரீதியாக நான் மக்களை சந்தித்து வருகிறேன். எங்கள் கூட்டணி உறுதியாக வெல்லும் . எங்கள் கூட்டணிக்கு தலைவர் என்ற முறையில் இன்று சேலம் வந்த நான், எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசினேன். பீகார் தேர்தலை தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு மிக பிரகாசமாக உள்ளது.

தமிழகத்தில் பெரிய கட்சி அதிமுக. அதே போல இந்திய அளவில் பெரிய கட்சி பாஜக. எனவே எங்கள் கூட்டணிக்கு மேலும் சில கட்சிகள் வர வாய்ப்புள்ளது.பீகார் தேர்தல் வெற்றி என்பது  ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு வளர்ச்சி என்ற வகையில் மக்கள் தேர்வு செய்திருக்கிறார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆர் நடைமுறை என்பது ,  தேர்தல் முறையாக நடக்க வேண்டும் என்பதற்காக தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. ஆனால் தோல்வி பயம் காரணமாக திமுக கூட்டணியினர் இதனை எதிர்க்கிறார்கள். எது தேவையோ, அவசியமோ அதை மட்டுமே த.மா.கா பேசும். தமிழ்நாட்டில் திமுக அரசுக்கு எதிரான வாக்குகள் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. எங்கள் கூட்டணிக்கு மேலும் பல கட்சிகள் வர உள்ளன” என்றார்.