போடா! ஒருமையில் பேசிய சீமானால் சலசலப்பு

 
s


பத்திரிக்கையாளர்களுக்கும்  சீமானுக்குமான கருத்து மோதல் அடிக்கடி அரங்கேறி வருகிறது.  இதில் சீமான் ஆவேசப்பட்டு ஒருமையில் பேசுவது சலசலப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.  அப்படித்தான்  தற்போதும் ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.

 சென்னையில் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரைக்கும் உள்ள லூப் சாலையில் மீன் கடைகளில் மீன் வாங்க வருவோர் வாகனங்களை சாலைகளிலேயே நிறுத்துவதால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது.   இதனால் இந்த கடைகளை அகற்ற சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ee

 இந்த உத்தரவை அடுத்து சாலையோர மீன் கடைகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றி வருகின்றார்கள்.  நொச்சிக்குப்பம் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்கள்.    மீன்களை சாலையில் கொட்டியும்,  சாலைகளில் படகுகளை நிறுத்தியும் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் .

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது,   ஆந்திரா, கர்நாடகா ,மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு என்ன இட ஒதுக்கீடு கொடுத்தார்கள்? என்று சொல்லிக் கொண்டிருந்தபோது,  செய்தியாளர் ஒருவர்,  அவர்களும் பிற்படுத்தப்பட்டவர்கள் தானே என்றதும்,  அப்போது ஆவேசமான சீமான்,  கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு தமிழ்நாட்டில் இட ஒதுக்கீடு இருக்கா இல்லையா? என்று கேட்டார்.

 அதற்கு செய்தியாளர் பதில் சொல்லாமல் மேலும் கேள்வி கேட்க,  நான் கேட்ட கேள்விக்கு நீ பதில் சொல்.  அப்புறம் நீ கேட்ட கேள்விக்கு நான் பதில் சொல்கிறேன் என்று மேலும் ஆத்திரமடைந்தார் சீமான்.   இப்போதும் அந்த செய்தியாளர் சீமான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாததால்,  ஏய் என்று ஆவேசப்பட்டு அந்த செய்தியாளர்களை நோக்கி கையை நீட்டி பேச,   ஏய் என்று சொல்லாதீங்க சார்.. என்று அந்த செய்தியாளர் ஆவேசப்பட,  ஏய்னு சொல்லாமல் ஓய்னு சொல்லவா.. போடா.. என்று சீமான் ஒருமையில் பேசியது அங்கிருந்த  செய்தியாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.