நாகையில் நடுக்கடலில் சிவனுக்கு தங்க, வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் விழா!!

 
tn

நாகையில் நடுக்கடலில் சிவனுக்கு தங்க, வெள்ளி மீன் அர்ப்பணிக்கும் விழா நடைபெற்றது.

tn
கிபி எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த அதிபத்த நாயனார் சிவ பக்தர்.  இவர் தமிழக கடற்கரை குப்பங்களின் தலைமை கிராமமாக விளங்கிய நாகை நம்பியார் நகர் மீனவ குடும்பத்தில் பிறந்தவர்.  நாள்தோறும் கடலில் வலை வீசி பிடிக்கும் முதல் மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணம்  செய்யும் வகையில் ,  பிடித்த மீனை கடலில்  விடுவதை  வழக்கமாக கொண்டிருந்தார்.  சில காலம் வறுமையில் வாடி இவரை சோதிக்க விரும்பிய சிவபெருமான்,  நாள்தோறும் மீன் பிடிக்கும் போது அதிபத்தர் வலையில் ஒரே மீன் மட்டும் கிடைக்கும்படி செய்தார். ஆனாலும் அதிபத்தர் வலையில்  கிடைக்கும் முதல் மீனை சிவனுக்கு தினமும் அர்ப்பணித்து வந்தார்.

tnn

ஒரு நாள் அதிபத்தர்   வீசிய வலையில் விலை மதிப்பில்லா தங்க மீன் ஒன்று கிடைக்கும்படி வழி செய்தார் சிவபெருமான் . வறுமையில் வாடிய அதிபத்தர் அதனையும் சிவனுக்கு அர்ப்பணம் செய்து விட்டார்.  இவரது பக்தியை பார்த்த  சிவன் ரிஷப வாகனத்தில் பார்வதி தேவியுடன் அதிபத்தருக்கு  காட்சியளித்ததாக கூறப்படுகிறது.  இந்நிகழ்வை போற்றும் வகையில் ஆண்டுதோறும் நாகை நம்பியார் நகர் மீனவ கிராமத்தில் ஆவணி மாதம் அதிபத்த நாயனாரின் முக்தி பெருவிழாவை கடலில் தங்க மீன் வெள்ளி மீன் பிடிக்கும் வித்தியாசமான திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மீனவர்கள் அதிபத்த நாயனாரின் சிலையை படகு ஒன்றில் வைத்து நடுக்கடலுக்கு எடுத்து தங்கமீன் வெள்ளி மீன் பிடித்து சமர்ப்பணம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். வேறு எங்கும் நடக்காத இத்திருவிழாவை சிவனடியார்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கண்டு பரவசமடைவது குறிப்பிடத்தக்கது.