தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரிப்பு!

கடந்த ஆண்டு தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றத்தைக் கண்டதை அனைவரும் அறிவோம். தொழில்துறையில் நிலவிய தேக்கத்தால் முதலீட்டாளர்கள் தங்களது முதலீடுகளை பாதுகாக்க தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலையும் எதிர்பாராத அளவுக்கு உயர்ந்தது. பின்னர், தொழில்துறையில் ஏற்பட்ட பாதிப்பு படிப்படியாக குறைந்து தங்கம் விலை சரியத் தொடங்கியது. ரூ.43 ஆயிரத்தில் இருந்து ரூ.36 ஆயிரத்துக்கு சரிந்தது.
அதன் பிறகு, தங்கம் விலையில் பெரிதளவில் மாற்றங்கள் ஏதும் இருக்கவில்லை. கடந்த சில மாதங்களாக ரூ.35 முதல் ரூ.36 ஆயிரத்திலேயே நீட்டித்து வருகிறது. நேற்று முன்தினம் ரூ.36,328க்கு விற்பனையான தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.216 குறைந்து ஒரு கிராம் ரூ.4,514க்கும் ஒரு சவரன் ரூ.36,112க்கும் விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 அதிகரித்துள்ளது.
இன்றைய நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.13 அதிகரித்து ரூ.4,527க்கு விற்பனையாகிறது. அதன் படி, சவரனுக்கு ரூ.104 அதிகரித்து ரூ.36,216க்கு விற்பனையாகிறது. மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.69.10க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ.69,100க்கும் விற்பனையாகிறது.