குட் நியூஸ்..! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ரூ.5 லட்சம் முன் பணம்..!
கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் குழந்தைகள் உயர் கல்வி பயிலும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி முன்பணம் நடப்பு ஆண்டில் இருந்து உயர்த்தப்படும் என்றார்.
அதன்படி, தொழிற்கல்வியில் சேர ரூ.1 லட்சம் என்ற அளவிலும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் படிப்புகளில் உயர் கல்வியில் சேர ரூ.50 ஆயிரம் என்ற அளவிலும் கல்வி முன்பணம் உயர்த்தி இரண்டு நாட்களுக்கு முன் ஜூன் 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில் இதே பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் இன்னொரு அறிவிப்பையும் முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். அதில், அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் திருமண முன்பணம் உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்தார். அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களின் திருமண முன்பணமாக தேவையின் அடிப்படையில் பணிக் காலத்தில் இதுவரை பெண் ஊழியர்களுக்கு ரூ.10 ஆயிரம், ஆண் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல்வரின் அறிவிப்புக்கு பின் அரசுப் பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவருக்கும் திருமண முன்பணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டிருக்கிறது. பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்த முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பை நடைமுறைப்படுத்தும் பொருட்டு இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அரசாணையை நிதித்துறை முதன்மைச் செயலாளர் உதயச்சந்திரன் வெளியிட்டிருக்கிறார்.


