பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்..! அரையாண்டு தேர்வுக்கு 12 நாட்கள் விடுமுறை..!
2025-26 கல்வியாண்டிற்கான அரையாண்டுத் தேர்வுகள், வரும் டிசம்பர் 15-ம் தேதி தொடங்கி, டிசம்பர் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிந்த மறுநாளான டிசம்பர் 24-ம் தேதி முதல், அரையாண்டு விடுமுறை தொடங்குகிறது. இந்த விடுமுறை, ஜனவரி 4-ம் தேதி வரை, மொத்தம் 12 நாட்கள் நீடிக்கும். இந்த நீண்ட விடுமுறையில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு ஆகிய பண்டிகைகளும் அடங்குவதால், மாணவர்கள் தங்கள் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக கொண்டாட ஒரு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நடப்பு கல்வியாண்டில், ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று, மொத்த வேலை நாட்கள் 220-லிருந்து 210 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. குறைக்கப்பட்ட அந்த 10 நாட்கள், ஆசிரியர்களுக்கான கல்விசார் பயிற்சிகளுக்காக பயன்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, காலாண்டு தேர்வுக்கு பிறகு மாணவர்களுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
தற்போது அரையாண்டு தேர்வுக்கான தேதிகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு வகுப்புக்குமான விரிவான தேர்வு கால அட்டவணையை, பள்ளிக்கல்வித்துறை விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்வு ஒருபுறம் இருந்தாலும், அதனை தொடர்ந்து வரும் நீண்ட விடுமுறையை எண்ணி மாணவர்கள் இப்போதே திட்டமிடத் தொடங்கிவிட்டனர்.


