சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..!பறக்கும் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ நிர்வாகத்திடம் ஒப்படைக்க முடிவு..!
சென்னை கடற்கரை- பரங்கிமலை இடையே எம்ஆர்டிஎஸ் ரயில் திட்டத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு வழங்க கொள்கை அளவிலான முடிவு எட்டப்பட்டது. இது தொடர்பான அறிக்கை ஏப்ரல் மாதம் ரயில் வாரியத்திற்கு ஒப்படைக்கப்பட்ட நிலையில் சில மாறுதலோடு ஒரு மாதத்திற்குள் ஒப்புதல் வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை மெட்ரோ ரயிலுக்கு நிகராக மாற்றி அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகமே ஏற்று நடத்தவும், தமிழ்நாடு அரசு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. தெற்கு ரயில்வே மெட்ரோ ரயில் இடையே இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் தயார் செய்யப்பட்டு ரயில்வே வாரியத்திற்கு ஒப்புதலுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஒரு மாதத்திற்குள் ரயில்வே வாரியம் சில மாறுதல்களோடு ஒப்புதல் அளிக்கவுள்ளது.
ரயில்வே ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் ரூபாய் 4,500 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ ரயில் நிர்வாகம் அதற்கான பணிகளை மேற்கொள்ள உள்ளது. மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுக்கு ஏற்றவாறு எம்ஆர்டிஎஸ் ரயில் சேவை மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் வணிக வளாகங்கள் அமைத்தல் சிக்னல் மேம்பாடு செய்தல், எம்ஆர்டிஎஸ் தண்டவாளங்களுக்கு ஏற்ப மெட்ரோ ரயில் பெட்டிகளைத் தயாரித்தல், ரயில் நிலையத்தில் மின்தூக்கி அமைத்தல், நகரும் மின்படிக்கட்டு உள்ளிட்டவையுடன் 2028-ம் ஆண்டு இறுதிக்குள் எம்ஆர்டிஎஸ் வழித்தடத்தை மெட்ரோ ரயில் சேவைக்கு நிகராக மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறைகள் அடிப்படையில் ரயில்வே எம்ஆர்டிஎஸ் ரயில் சேவையை பழைய நடைமுறையில் உள்ள கட்டண விகிதப்படி தொடர்வது குறித்தும் பரீசிலனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 21 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுவதோடு மட்டுமல்லாமல் மெட்ரோ ரயில் வழித்தடமாக மாற்றப்பட உள்ளது.
சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில் சென்னை கடற்கரை, சென்னை கோட்டை, பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், முண்டக்கண்ணி அம்மன் கோவில், திருமயிலை, மந்தவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபாய் நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ஆகிய 18 ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டு 19.47 கி.மீ. தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
அதேபோல், வேளச்சேரி - பரங்கிமலை ரயில் வழித்தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை ஆகிய மூன்று ரயில் நிலையங்கள் இணைக்கப்பட்டு 5 கி.மீ. தூரத்திற்கு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

