‘போலீஸ் இருப்பாங்க ஹெல்மெட் போடுங்க..’ எச்சரிக்கும் கூகுள் மேப்.. அமைச்சரின் அட்வைஸ்..
ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பயணிப்பவர்களுக்கு, போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக கூகுள் மேப்பில் பயனர் ஒருவர் அலர்ட் கொடுத்திருக்கிறார். இந்த நிகழ்வு இணையத்தில் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது.
ஒரு புதிய இடத்தில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றால் முன்பெல்லாம் விலாசத்தை கையில் வைத்துக்கொண்டு வழியில் பார்ப்பவர்களிடம் விசாரித்து விசாரித்து செல்ல வெண்டும். ஆனால் அண்மைக்காலமாக அந்த பிரச்சணை இல்லை. ஏனெனில் அனைவர் கையிலும் ஸ்மார்ட் போன் வந்துவிட்டது. கூகுள் மேப்பில் லொகேஷனை ட்ராக் செய்து எங்கு வேண்டுமானாலும் எளிதாக பயணிக்கலாம். அட்ரஸே இல்லாத தெருக்களில் கூட கூகுள் மேப் பயன்படுத்தி சென்றுவிடலாம். அதிலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் பணிபுரியும், ஓட்டுநர்களாக இருக்கும் வெளி மாநிலம் , வெளியூர்களை சேர்ந்தவர்களுக்கு கூகுள் மேப் ஒரு வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.

இந்தியாவில் தினந்தோறும் கூகுள் மேப்ஸில் 5 கோடிக்கும் மேற்பட்ட இடங்கள் குறித்து பல்வேறு மொழிகளில் தேடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் சென்னை, வேளச்சேரி மெயின் ரோட்டில் உள்ள ஒரு இடத்தை குறிப்பிட்டு பயனர் ஒருவர், ‘போலீஸ் இருப்பாங்க... ஹெல்மெட் போடுங்க’ என மேப் செய்துள்ளார். இந்த நெட்டிசன்கள் மத்தியில் கவனம் பெற்றிருக்கிறது.
இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவது கட்டாயம் என்பதுடன், சென்னை போன்ற பெரு நகரங்களில் இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவரும் ஹெல்மெட் அணிவது அவசியமாகிறது. அவ்வாறு அணியாதவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்படுகிறது. இந்தச் சூழலில் அந்த கூகுள் பயனர் சம்பந்தப்பட்ட இடத்தை மேப் செய்து போலீஸ் இருப்பார்கள் என தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.

இதுதொடர்பான ஸ்கிரீன் ஷார்ட்டை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, ‘ஹெல்மெட் விழிப்புணர்வு சார்ந்த அடுத்த பிரச்சாரத்தில் நமது போக்குவரத்து காவலர்கள் இதுபோன்ற முயற்சியை முன்னெடுக்கலாம்’ என அதற்கு கேப்ஷனும் கொடுத்துள்ளார். ஆனால் கூகுள் மேப்ஸில் இருந்து அந்த குறிப்பிட்ட மேப்பிங் தற்போது அகற்றப்பட்டிருக்கிறது. இருசக்கர வாகன ஓட்டிகள், பயணம் மேற்கொள்ளும்போது ஹெல்மெட் அணிவது விதிகளுக்காக என்றில்லாமல், உயிரை பாதுகாக்க என்பதை புரிந்துகொள்ள வேண்டுமென பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Our Traffic Cops should try pinning such notes all over @googlemaps,,,of Chennai and all of TN for their next campaign 😅#WearAHelmet stay safe 🙏🏾
— Dr. T R B Rajaa (@TRBRajaa) July 22, 2024
Ps: this is a real screenshot ! Try GMaps ! pic.twitter.com/jfFKySgYox


