அரசு பேருந்துகளில் கட்டணமின்றி நிவாரணப் பொருட்களை அனுப்பலாம்- தமிழக அரசு

 
BUS

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு நிவாரண பொருட்களை அரசு பேருந்துகள் மூலம் கட்டணம் இல்லாமல் அனுப்பலாம் என்று போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

Image

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்கள் தமிழகம் முழுவதும் இருந்து நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பி வருகின்றனர். தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க தமிழக போக்குவரத்து துறை அமைச்சரின்  அறிவுறுத்தலின்படி அவ்வாறு அனுப்பும் நிவாரண பொருட்களுக்கு கட்டணம் வசூலிக்காமல் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர்கள் அலுவலகம் சென்றடைய தமிழகம் முழுவதும் இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் உள்ள சுமை பெட்டிகள்  மூலம் அனுப்ப அனுமதிக்கப்படுகிறது என்று அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்செந்தூர் கோவிலில் சிக்கி இருக்கும் பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சொந்த ஊர் செல்ல முடியாமல் 3 நாட்களாக அவதி அடையும் நிலையில் மதுரை, திருச்சி மற்றும் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு சிறப்பு பேருந்துகள் மூலமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்கான சிறப்பு பேருந்துகள் இன்று காலை முதல் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து பக்தர்கள் கட்டணம் இன்றி  திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அங்கிருந்து அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.