அரசு மருத்துவர்கள் பாதயாத்திரை.. மருத்துவமனைகளின் அவல நிலைக்கு ஸ்டாலின் பொறுப்பேற்கனும் - டிடிவி தினகரன்..
அரசு மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகளின் அவல நிலைக்கு திமுக அரசும் அதன் முதலமைச்சரும் தான் பொறுப்பேற்க வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்கள்,செவிலியர்கள் நியமனம், ஊதிய உயர்வு, கொரோனா பேரிடர் தொற்று காலத்தில் உயிரிழந்த அரசு மருத்துவர் திரு.விவேகானந்தன் அவர்களின் மனைவிக்கு நிவாரணம் மற்றும் அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் சேலம் மாவட்டம் மேட்டூரிலிருந்து சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஆம் ஆண்டு அரசு மருத்துவர்கள் முன்னெடுத்த தொடர் போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வழங்கிய வாக்குறுதிகளை, முதலமைச்சரான பின்பு நிறைவேற்ற மறுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழக அரசிடம் கோரிக்கை மனு சமர்ப்பிக்கும் போராட்டம், காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் என கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட அனைத்துவித போராட்டங்களுக்கும் துளியளவும் செவிசாய்க்காத திமுக அரசின் கவனத்தை ஈர்க்க வேறு வழியின்றி சென்னையை நோக்கி பாதயாத்திரை நடத்தும் சூழலுக்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை, மருத்துவ உபகரணங்கள் தட்டுப்பாடு, டார்ச் லைட் வெளிச்சத்தில் நோயாளிகளுக்கு தூய்மைப் பணியாளர்களே சிகிச்சை அளிக்கும் அவலம் என அடியோடு சீர்குலைந்திருக்கும் சுகாதாரத்துறையால் அரசு மருத்துவமனைகளை நோக்கி வரும் நோயாளிகளின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
எனவே, இனியும் காலம் தாமதிக்காமல் பாதயாத்திரை மேற்கொண்டு வரும் அரசு மருத்துவர்களின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றிட முன்வர வேண்டும் என சுகாதாரத்துறையையும், தமிழக அரசையும் வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


