ஆர்டிஇ மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் - ஐகோர்ட்..

 
Highcourt

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை மற்றும் புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தமிழகத்தில் சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், ஏழை குழந்தைகளுக்கு ஆண்டு தோறும் இலவச சேர்க்கை வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு தனியார் பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியாவர்கள் தேர்வு செய்யப்படுவர். அந்தவகையில் வேலூரில் உள்ள தனியார் பள்ளி நிர்வாகம் ஒன்று கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்ந்த மாணவரிடம் சீருடை, மற்றும் புத்தகங்களுக்கு 11 ஆயிரத்து 977 ரூபாய் செலுத்த வேண்டும் என கேட்டுள்ளது.

ஆர்டிஇ மூலம் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு சீருடை, புத்தகங்களை அரசுதான் வழங்க வேண்டும் - ஐகோர்ட்..

இதனையடுத்து  தனியார் பள்ளி நிர்வாகத்தின்  உத்தரவை எதிர்த்து,  மாணவரின் தந்தை மகாராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் கல்விக் கட்டணத்தை ஏற்கும் அரசுதான்,  மாணவர்களுடைய சீருடை மற்றும் புத்தகங்களுக்கான கட்டணத்தையும் ஏற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.   இது அரசின் கடமை என்று தெரிவித்துள்ள நீதிமன்றம் இது தொடர்பாக அதிகாரிகளுக்கு 2 வாரங்களில் உரிய அறிவுரை வழங்க பள்ளிக் கல்வித்துறை செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் தனியார் பள்ளிக்கு எதிரான வழக்கையும்   சென்னை உயர்நீதின்றம்  முடித்து வைத்தது.