மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு ஆளுநர் வேண்டுகோள்
மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி இயல்புநிலை திரும்பும்வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் மிக்ஜாம் புயல் தற்போது சென்னையிலிருந்து வடகிழக்கு திசையில் 100 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. மேலும் மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு தென்கிழக்கு திசையில் 120 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையைவிட்டு விலகிச்செல்லும் மிக்ஜாம் புயல், தற்போது ஆந்திராவின் நெல்லூர் நோக்கி நகர்ந்து வருவதாகவும், மிக்ஜாம் புயலானது நாளை முற்பகலில் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே பாபட்லா அருகே தீவிர புயலாக கரையைக் கடக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது காற்றின் வேகமானது 90 முதல் 110 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தின் சில கிழக்கு கடற்கரையோட மாவட்டங்கள் மிக்ஜாம் புயலினால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். அத்தியாவசிய சேவைகள் மற்றும் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய ம்றறும் மாநில அரசு அமைப்புகள் களத்தில் இருப்பதாகவும், மாநில அரசின் அறிவுரைகளை பின்பற்றி இயல்புநிலை திரும்பும் வரை மக்கள் வீட்டிலேயே இருக்குமாறு கேட்டுக்கொள்வதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


