காந்தி மண்டபத்தில் கிடந்த மது பாட்டில்கள்- சுத்தம் செய்த ஆளுநர்
காந்தி மண்டபத்தில் சுத்தம் செய்யும் பணியின்போது மது பாட்டில்களையும் கண்டது தனக்கு வருத்தமளிப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி பேட்டியளித்துள்ளார்.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சென்னை காந்தி மண்டபத்தில் "தூய்மையே சேவை" என்ற வெகுஜன தூய்மை பணியை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார். இந்த தூய்மை சேவை மூலம், தன்னார்வலர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் காந்தி மண்டப வளாகத்தில் உள்ள தியாகிகள் நினைவிடங்களை தூய்மை செய்தனர். காந்தி சிலையில் தண்ணீரை ஊற்றி தூய்மை பணியை தொடங்கிய ஆளுநர் ரவி, குப்பைகளை சேகரித்தபின், வளாகத்தை பார்வையிட்டு மாணவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். முன்னதாக தூய்மை திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் ஆளுநர் "தூய்மையை வலியுறுத்தும் உறுதிமொழியை" எடுத்துக் கொண்டார்.
அப்போது பேட்டியளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, “மகாத்மா காந்தி சுதந்திர போராட்ட தியாகி மட்டுமல்ல, அவர் தூய்மையை வலியுறுத்தினார். தூய்மைப்படுத்துதல் என்பது கடவுளுக்கு சேவை செய்ததற்கு சமம். தூய்மைப்படுத்துதலை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும். நமது நாட்டில் பொது இடங்களில் குப்பை வீசுகிறார்கள். இது சரியல்ல. நல்ல மாற்றத்திற்கான சமூகத்திற்கான அறிகுறி அல்ல இது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தூய்மை பணியை மாதத்தில் ஒரு முறையாவது மேற்கொள்ள் வேண்டுமென தெரிவித்துள்ளேன். பல இடங்களில் நானும் சுத்தப்படுத்தும் பணியில் கலந்து கொண்டுள்ளேன்.
தூய்மைப்படுத்துவது என்பது ஒரு நாள் பணி அல்ல. நாம் தினந்தோறும், பொது இடங்களில் குப்பை போடக்கூடாது, பொது இடங்கள் அனைவருக்கும் பொதுவானது. காந்தி மண்டபத்தில் சுத்தம் செய்யும் பணியில் சில பாட்டிலகளை எடுத்தேன், அதில் மது பாட்டில்களையும் கண்டேன், இது காந்தியுடைய கொள்கைகளுக்கு எதிரானது, எனக்கு வருத்தம் அளிக்கிறது” எனக் கூறினார்.