"தமிழ்நாட்டை பிரிக்க முயற்சி! தமிழை வைத்து அரசியல் செய்கின்றனர்"- ஆளுநர் ரவி
இந்தி மொழியை வைத்து, கடந்த 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த முயற்சி நடப்பதாக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தூர்தர்ஷன் தமிழ் எனப்படும் சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், சென்னைத் தொலைக்காட்சியின் பொன்விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சிகளில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “இந்தி மொழியை வைத்து, கடந்த 50 ஆண்டுகளாக மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டை தனிமைப்படுத்த முயற்சி நடக்கிறது. இந்தியாவின் பலமான அங்கமாக தமிழ்நாடு எப்போதும் இருக்கும்.
தமிழக மக்கள் மத்தியில் இந்தி கற்க அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இங்கே இந்தி திணிக்கப்படவில்லை. நாட்டில் 27 மாநிலங்களில் மும்மொழிக்கொள்கை இருக்கிறது.50 ஆண்டுகளாக மக்களின் மூளையில் விஷம் ஏற்றப்பட்டுள்ளது. தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தமிழை இந்தியாவைவிட்டு வெளியே கொண்டு செல்ல என்ன செய்தனர்? தமிழ்நாட்டில் மட்டுமே 3ஆவது மொழியாக, எந்த மொழியையும் அனுமதிப்பதில்லை. பிற மாநிலங்களில் அனுமதிக்க்ன்றனர். மக்களை கொண்டு தமிழை வைத்ட் அரசியல் மட்டுமே செய்கின்றனர்" எனக் கூறினார்.