மாநாட்டில் பங்கேற்றால் குடும்பத்தை பார்க்க முடியாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல்- ஆளுநர் ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
பல்கலைக்கழக கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை என்றும் துணை வேந்தர் மாநாடு கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே நடத்தப்படுவதாகவும், இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.

உதகையில் உள்ள ராஜ் பவனின் 4-வது ஆண்டாக துணைவேந்தர்கள் மாநாடு இன்று தொடங்கியது. இந்த மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தலைமையில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தொடங்கி வைத்தார். இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தில் உள்ள மாநில பல்கலைகழகங்கள், ஒன்றிய மற்றும் தனியார் பல்கலைகழகங்கள் என 49 பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 14 துணைவேந்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 9 துணைவேந்தர்கள் மட்டுமே பங்கேற்றனர். மற்ற 25 பல்கலைக்கழகங்கள் சார்ந்த பதிவாளர்கள், பேராசிரியர்கள், டீன்கள் பங்கேற்றனர். இதில் மாநில பல்கலைக்கழகங்களில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் மட்டுமே பங்கேற்றனர்.

மாநாட்டில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படும் நிலையில், அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. பாதிக்கும் மேற்பட்ட மாணவர்கள் இரண்டு இலக்க எண்களை கூட படிக்க முடியவில்லை. தமிழக கல்வி முறையில் இரண்டு வேறுபட்ட நிலைகள் உள்ளன. தனியார் பள்ளிகள் சிறப்பாக செயல்படும் நிலையில், அரசு பள்ளிகளின் தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தை படிக்க முடியாத நிலையில் உள்ளனர். பல்கலைக்கழகங்களுக்கு அரசு தடையினால் மாநாட்டில் தமிழகத்தின் அரசு பல்கலைக்கழகங்கள் பங்கேற்கவில்லை. பல்கலைக்கழகங்களுக்கு மாநாட்டில் பங்கேற்கக் கூடாது என எழுத்துப்பூர்வமாக உத்தரவிடப்பட்டுள்ளது. ஊட்டிக்கு வந்திருந்த சில துணைவேந்தர்களுக்கு நள்ளிரவில் மாநில புலனாய்வு பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மாநாட்டில் பங்கேற்றால் உங்கள் குடும்பத்தை சந்திக்க முடியாது என துணைவேந்தர்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கல்வி மேம்பாட்டில் அரசியல் இல்லை, பல்கலை கழக துணை வேந்தர் மாநாடு கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக மட்டுமே நடத்தப்படுகிறது. இதில் எந்த அரசியல் நோக்கமும் இல்லை. தமிழகத்தின் கல்வித்தரத்தை மேம்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகள் தேவை” என்றார்.


