"இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்குக" - ராமதாஸ் வலியுறுத்தல்

 
pmk

இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம், சேலம் வட்டம், எஸ்.கொல்லப்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசுக் கிடங்கில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த நடேசன்,  சதீஷ்குமார் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு பெண் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அத்துடன்  சேலம் எம்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த வசந்தா, மோகனா, மணிமேகலா, மகேஸ்வரி, பிரபாகரன் ஆகிய ஆறு பேர்  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறு பேருக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் முதலமைச்சரின் நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து- ஒரு பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு.!

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "சேலம் மாவட்டம் சர்க்கார் கொல்லப்பட்டியில் உள்ள நாட்டு வெடி கிடங்கில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் அங்கு பணியாற்றி வந்த நால்வர் உயிரிழந்தனர்; 5 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வருகின்றனர்  என்ற செய்தியறிந்து மிகுந்த  வேதனையடைந்தேன். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த ஐவருக்கும் தரமான மருத்துவம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் விரைவில் நலமடைந்து வீடு  திரும்ப எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


விருதுநகர் மாவட்டத்தில் மட்டும் தான் பட்டாசு விபத்துகள் ஏற்படும் என்ற நிலை மாறி, எல்லா மாவட்டங்களிலும் இப்போது வெடி விபத்துகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் பட்டாசு மற்றும் வெடி ஆலைகளிலும், அவை பாதுகாத்து வைக்கப்படும் கிடங்குகளிலும் போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாதது தான். இந்தக் குறைகளை சரி செய்து இனி வரும் காலங்களில் வெடி விபத்தே இல்லை என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்." என்று குறிப்பிட்டுள்ளார்.